ஜெயலலிதாவாக நடிப்பது சவாலான விஷயம், எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் நிறுவனத்தின் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தின் விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஆர்.மாலில் அமைந்துள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸில் நேற்று இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸின் தலைமை செயல் அதிகாரி விபின் தியாகி கலந்து கொண்டு தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மண்டலத்துக்குத் தூதுவர் கீர்த்தி சுரேஷ் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய கீர்த்தி, “பள்ளி நாட்கள் முதலே ரிலையன்ஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்தியுள்ளேன். இப்போது அந்த பிராண்டின் தென்னிந்திய முகமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
மேலும் கேரளா வெள்ளம் பற்றி பேசும்போது, “கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார்.
அதனையடுத்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுவதையொட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை. அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
