தொலைக்காட்சிகளில் மட்டும் பார்த்துவந்த மான்செஸ்டர் யுனெடட் அணியின் முன்னாள் ஜாம்பாவான்களான வெஸ் பிரவுன் மற்றும் விட் யார்க் ஆகியோர் சென்னையிலுள்ள ஹோட்டலில், அந்த சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தது தான் இன்றைய விளையாட்டு உலகின் முக்கியமான பேச்சு.
Teach For India என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், மான்செஸ்டர் யுனெடட் கால்பந்தாட்ட கிளப் அணியில், அவர்கள் காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பாவான்களான பிரவுன் மற்றும் யார்க் ஆகியோர் கலந்துகொண்டது குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது.
இந்திய கல்வி சேவையில் இருக்கும் குறைகளைப் போக்கவும், அனைவருக்கும் சமமான கல்வி வழங்கவும் TFI என்ற அமைப்பு இயங்கிவருகிறது. படித்த இளைஞர்களை ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் பள்ளிகளில் வேலைக்கு அமர்த்தி நிறைவான கல்வியைத் தருவதே TFIயின் நோக்கம். அந்த வகையில், கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டும் ஒரு குழந்தையின் செயல்பாடுகளை திறன் மிகுந்ததாக மாற்றுவது எப்படி என்ற வகுப்பினை மான்செஸ்டர் ஜாம்பாவான்கள் அந்தக் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தனர்.
12 வயதில் மான்செஸ்டர் கிளப்பில் சேர்ந்து, அதன்பிறகான இருபது வருடங்களை அங்கேயே தங்கிப் படித்த வெஸ் பிரவுனைவிட இந்நிகழ்வை சிறப்பாக்கக்கூடியவர் வேறு யார்?
