சர்க்கரை ஆலையில் கரும்பு நசுக்கும் பணி முடங்கியுள்ளதால் சாகுபடியில் ஈடுபடமுடியாமல் திருப்பூர் கரும்பு விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 20 நாட்களுக்கு மேலாக இயங்காமல் இருக்கிறது. இதனால் அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்புகள் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஆலையில் மார்ச் மாத நிறைவில் கரும்பு நசுங்கும் பணி தொடங்கிய நிலையில் தற்போது அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. தினசரி 1,300 டன் அளவிலான கரும்புகளை நசுக்கும் திறனை இந்த ஆலை கொண்டுள்ளது.
கரும்பு நசுக்கும் பணி முடங்கியுள்ளதால் இந்த ஆலையின் நிர்வாகத்தின் மீதும் தமிழக அரசின் மீதும் கரும்பு விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கூடுதல் செயலாளர் பால தண்டபாணி *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், ”கரும்பு நசுக்குப் பணி தொடங்கியதிலிருந்து இதுவரையில் மூன்று மாதம் வரையில் வீணாகிவிட்டது. தமிழக அரசின் போதிய கவனமும் ஆலையின் முறையான மேலாண்மையும் இல்லாததே அதற்குக் காரணம். இந்த ஆலையில் வேலைபார்க்கும் 300 பேரைச் சரியான சமயத்தில் முறையான வேலையில் ஈடுபடவைக்க ஆலையும் தமிழக அரசும் தவறிவிட்டது” என்று புகார் தெரிவித்துள்ளார்.
போதிய எரிபொருளும் தண்ணீரும் இல்லாமல் இந்த ஆலை எட்டு நாளுக்கு மேலாக இயங்காமல் இருக்கிறது. அதேபோல, எந்திரங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைக் கொள்முதல் செய்யவும் இந்த ஆலை தவறிவிட்டதாக அவர் புகார் கூறுகிறார். இதுவரையில் 73,000 டன் அளவிலான கரும்பு மட்டுமே இந்த ஆலையில் நசுக்கப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 30,000 டன் கரும்பு நசுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆலையின் இயக்கம் முடங்கியதால் கூடுதலாக 23 நாட்கள் செலவிடவேண்டியிருக்கும்.
விவசாயிகளுக்கான பாக்கித் தொகையையும் சர்க்கரை ஆலை இன்னும் வழங்கவில்லை. ஆனால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பாக்கித் தொகை வழங்கப்படும் என்று ஆலை தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. பராமரிப்புப் பணிகளுக்காகவே சர்க்கரை ஆலை தற்காலிகமாக இயங்காமல் இருப்பதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அறுவடைக்குத் தயாராக இருக்கும் கரும்புகள் கருகிக் கொண்டிருப்பதே விவசாயிகளின் பெரும் கவலையாக உள்ளது.
**
மேலும் படிக்க
**
**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**
**[திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/26/18)**
**[டிஜிட்டல் திண்ணை: தங்கம் -தினகரன்: உறவை உடைத்த அந்த ஒரு வார்த்தை!](https://minnambalam.com/k/2019/06/25/89)**
**[சர்ச்சைக்குரிய விளம்பரம்: கோவை விடுதிக்கு சீல்!](https://minnambalam.com/k/2019/06/26/23)**
**[திமுக -காங்கிரஸ் உரசல்: ப.சிதம்பரம் தலையீடு!](https://minnambalam.com/k/2019/06/24/69)**














