Nஎழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

Published On:

| By Balaji

பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார்.

மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

எண்பதுகள், தொண்ணூறுகளில் மிகப் பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்டவர் பாலகுமாரன். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தினால், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். சிந்து பைரவி, புன்னகை மன்னன் முதலான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தை அவருடைய மேற்பார்வையில் இயக்கினார்.

பின்னாட்களில் சினிமா வசனகர்த்தாவாகவும் தனி முத்திரை பதித்தார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தன்னுடைய அடுத்த அத்தியாயத்தைத் துவங்கினார். அதையடுத்து குணா, செண்பகத்தோட்டம், ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், பாட்ஷா, முகவரி, சிட்டிசன், மன்மதன், புதுப்பேட்டை உட்பட 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘நான் ஒரு தடவை சொன்னா… 100 தடவை சொன்ன மாதிரி’ என்கிற வசனத்துக்கு சொந்தக்காரர் இவரே. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எழுத்துச் சித்தர் என வாசகர்களால் கொண்டாடப்படும் பாலகுமாரன், சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலமானார்.

பாலகுமாரன் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share