அம்ரபளி க்ரூப் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீடுகளை வழங்கவில்லை என்று சுமார் 46,000 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சொத்துகள், துணை நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்களின் சொத்துகளை இணைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் அம்ரபளி நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராகவும், விளம்பரங்களில் நடிக்கவும், விளம்பரங்களில் தனது புகைப்படங்களை பயன்படுத்தவும் கிரிக்கெட் வீரர் தோனி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் அம்ரபளி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்த தோனி மீதும் புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் அம்ரபளி நிறுவனத்திலிருந்து தோனி விலகிவிட்டார். இந்நிலையில் அம்ரபளி நிறுவனத்திடமிருந்து தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை பெற்றுத்தர உதவுமாறு உச்ச நீதிமன்றத்தில் தோனி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அம்ரபளி நிறுவனத்தை விளம்பரப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்ததாகவும், தனக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.38.95 கோடி தொகை இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தோனி தெரிவித்துள்ளார். அம்ரபளி நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் நகல்களையும் உச்ச நீதிமன்றத்தில் தோனி சமர்ப்பித்துள்ளார்.
