மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் குற்றாலம், ஐந்தருவி, பிரதான அருவி போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் பெய்த கனமழையால் தொடர்ந்து நான்கு வாரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 08) குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஊருக்குள் மழை இல்லாத நிலையிலும் மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நேற்று மாலை முதல் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஐந்தருவியில் 5 பிரிவுகளும் இணைந்து ஒரே பிரிவாகத் தண்ணீர் விழுந்தது. பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டித் தடாகத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க நேற்றிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளும், சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.