தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. myanmar earthquake death toll report
உலகில் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு மியான்மர் நாட்டின் சாகைங் நகரின் வடமேற்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று காலை 11.50 மணிக்கு ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்திலும் எதிரொலித்து. வானுயர கட்டிடங்கள் கொண்ட தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் அதிக சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன.
பாங்காங்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாகவும், இதுவரை 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தாய்லாந்து துணைப் பிரதமர் ஃபும்தம் வெச்சாயாசாய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மியான்மரின் தலைநகர் நேபிடாவில் உள்ள 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே காயமடைந்த பலர் வரிசையாக சிகிச்சை பெற காத்திருக்கின்றனர்.

மேலும் மியான்மர் மற்றும் தாய்லாந்து இருநாடுகளில் சேர்ந்து இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 350க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய யூனியன் ஆதரவு!
இந்த நிலையில் “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உள்கட்டமைப்பு சேதம் மற்றும் உடனடி மனிதாபிமானத் தேவைகள் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்” என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இதயத்தை உடைக்கும் காட்சிகளாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 27 நாடுகளின் கூட்டமைப்பு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கம் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் அளித்த பேட்டியில், ”மியான்மரில் ஏற்பட்டுள்ள சேத அறிக்கையை நாங்கள் தற்போது பகுப்பாய்வு செய்து வருகிறோம். மியான்மரில் உள்ள அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், மேலும் தேவைப்படும் உதவி மற்றும் நிவாரணப் பொருட்களின் அடிப்படையில் சரியான தேவைகளையும் ஆராய்ந்து வருகிறோம். இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் போதெல்லாம் இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.