திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)க்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், “எங்களை நிர்பந்தப்படுத்துவதற்கு திமுக பாஜக அல்ல; அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல” என சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியின் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் வகையில் தேர்தல் சுற்றுப்பயணமாக பெரியநாயக்கன்பாளையத்திற்கு வருகை தந்த முத்தரசன், இன்று (மார்ச் 22) செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தத் தேர்தலில் சிபிஐக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளதால், திமுக நிர்பந்தித்ததா அல்லது சமரசம் செய்துகொண்டீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “எங்களை நிர்பந்தப்படுத்துவதற்கு திமுக பாஜக அல்ல; அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல. தமிழ்நாட்டில் அமைந்துள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. இக்கூட்டணியைப் போல் வேறு எந்தக் கூட்டணியும் 10 ஆண்டுகளாக நிலைத்து நின்றதில்லை.
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தமிழக தேர்தல் வரலாற்றில் கூட்டணி அமைத்தே போட்டிகள் நடைபெற்றுள்ளன. நான் அறிந்த வரையில், திமுக கூட்டணியானாலும் அதிமுக கூட்டணியானாலும் ஓராண்டுக்கு மேல் நீடித்ததாக வரலாறு இல்லை. ஆனால் தற்போதைய எங்கள் திமுக கூட்டணி 10 ஆண்டுகளாக நீடிப்பதற்கு காரணம் கொள்கைக்கூட்டணி. கொள்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதனால் சீட்டு என்பது பிரச்னையில்லை. நமக்கு எது அபாயம் என்றே பார்க்க வேண்டும். எது தீங்கானது? ஆர்.எஸ்.எஸ்.-தான் தீங்கானது. இந்தத் தீங்கிற்கு தமிழகத்தில் சிலர் துணை போய்விட்டனர். இவர்களை அனுமதிப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்து. அந்த அக்கறையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இந்தக் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனால் சீட்டு குறைவதைப் பற்றியோ கூடுவதைப் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை” என்று இரா. முத்தரசன் தெரிவித்தார்.
