ADVERTISEMENT

”நம்பகதன்மையற்ற தலைவர் எடப்பாடி” – காரணங்களை அடுக்கி முத்தரசன் கடும் விமர்சனம்!

Published On:

| By Minnambalam Desk

mutharasan attack edappadi palanisamy

எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா கதி அதோகதியானது. ஓபிஎஸ், எடப்பாடியை ஆதரித்து அவரது ஆட்சியை காப்பாற்றினார்கள். அவர் கதி என்ன ஆனது? ஆகவே நம்பகதன்மையற்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். mutharasan attack edappadi palanisamy

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு இன்று (ஜூலை 19) துவங்க உள்ள நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், ”நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த பிரச்சாரத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. நாலாந்தர பேச்சுகளை பேசுவதால் யாருக்கும் எந்த பயனில்லை நல்ல விவாதத்தை தான் மக்கள் விரும்புவார்கள் தமிழகத்தில் அதிமுக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல அரசியல் தெரியும். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவர்தான் ஏறத்தாழ நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். ஆகவே அவரிடத்தில் இருந்து ஒரு முதிர்ச்சியான அரசியலை நாங்கள் எதிர்பார்ப்பது தவறு இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்.

ADVERTISEMENT

அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தான் ஜூலை 7ஆம் தேதி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அந்தப் பிரச்சாரத்தை அவர் தொடங்கிய போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிற இடம் தெரியவில்லை. அது காணாமல் போய்விட்டது. கரைந்து போய்விட்டது. முகவரி இல்லாமல் போய்விட்டது” என்றார்.

எங்கிருந்து கொண்டு அழைப்பு விடுப்பது?

மேலும், “ஜூலை 16ஆம் தேதி சிதம்பரத்தில் கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் எங்கள் அணிக்கு வர வேண்டும். வரும் பட்சத்தில் நாங்கள் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அறிவித்தார். ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி அழைப்பு கொடுப்பது ஒன்றும் தவறு அல்ல.

ADVERTISEMENT

ஆனால் எங்கிருந்து கொண்டு அழைப்பு விடுப்பது யாரோடு சேர்ந்து கொண்டு அழைப்பு விடுப்பது என்பது தான் இங்கு பிரச்சனை. அதனால் தான் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது அது ரத்தின கம்பளம் அல்ல, ரத்த கம்பளம் என்று நான் பதில் சொன்னேன். இந்த அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக நிராகரிக்கிறோம் என்றேன். அதற்கான காரணத்தையும் சொன்னேன்.

பாரதிய ஜனதா கட்சி ஒரு அரசியல் கட்சி. ஆர்.எஸ்.எஸ் ஆல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி 2014 இல் இருந்து தொடர்ச்சியாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி. அந்தக் கட்சி தன் ஆட்சியை பயன்படுத்தி நமது அரசியல் அரசியல் அமைப்பு சட்டத்தை நிராகரித்துவிட்டு மனுதர்ம சட்டத்தை அமல்படுத்துவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

தேச பிதா உயிரை பறிகொடுத்தோம்!

உலகத்திலேயே இருக்கக்கூடிய நாடுகளில் நமது நாடு மக்கள் தொகையில் பெரிய நாடு மட்டுமல்ல. மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்ற பெருமையுடன் மிக உன்னதமான கொள்கையை பின்பற்றி வருகிறது.

இந்தியாவில் இந்து மதம் மட்டுமல்ல. கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம், பௌத்தம் என பல்வேறு மதங்கள் இருக்கின்றன. இத்தனை மதங்கள் இருந்த போதும் மதச்சார்பற்ற நாடு என்ற மகத்தான உயரிய கொள்கையை நாடு பின்பற்றி வருகிறது.

இந்த கொள்கைக்கு நாடு முதலில் கொடுத்த விலை என்பது தேசப்பிதா என போற்றப்பட்ட மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதுதான். இந்தக் கொள்கையில் அவர் உறுதியாக இருந்த காரணத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்படி தேச தந்தையின் உயிரை பறிகொடுத்து அந்தக் கொள்கையை காப்பாற்றி வருகிறோம். மதச்சார்பின்மை என்ற மகத்தான கொள்கைக்கு இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கின்ற ஆர்எஸ்எஸ், பிஜேபி களங்கம் கற்பிக்கிறது. அந்த மதச்சார்பின்மை கொள்கையை கைவிடுவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?

அண்மையில் மத்திய பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு பாடத்தில் முகாலய மன்னர்கள் அக்பர் காலங்களில் இந்துக்களுக்கு எதிராக எத்தகைய அட்டூழியங்கள் நடைபெற்றது என்று இப்போது பாடத்திட்டத்தில் சேர்த்து இருக்கிறார்கள். இதன் நோக்கம் என்ன?

இளம் வயதிலேயே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் மீது ஒரு வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்படுகிறது. இதுதான் பாஜக. இதை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா?

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் ஏற்கனவே எப்படி இருந்தது? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டினுடைய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இந்த மூவரை கொண்ட குழு தேர்தல் ஆணையத்திற்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் என்று இருந்தது. மோடி அரசு அதை முற்றாக நீக்கிவிட்டு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமனம் செய்யக்கூடிய ஒன்றிய அமைச்சர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என மாற்றி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது ஆட்சியாளர்களின் விருப்பத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.

அரசியலமைப்பு சட்டம் தான் நாட்டை வழி நடத்துகிறது என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்த மகத்தான அமைப்பு தேர்தல் ஆணையம்,

இந்த நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலை ஒரு ஜனநாயக முறைப்படி பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டும்.

யாருடைய உத்தரவுக்கும் கட்டளைக்கும் தேர்தல் ஆணையம் அடிபணிய கூடாது என்று மிக சுதந்திரமாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் கட்டளைக்கு காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி உள்ளது.

திமுக கூட்டணிக்கு எந்த கட்சி வருகின்றது, வர வில்லை என்பது தெரியாது. கூட்டணியில் சேர்ப்பதா இல்லையா என முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான்.

1952 தேர்தலில் இருந்து தமிழகத்தில் கூட்டணி இருக்கிறது. ஆனால் அந்த கூட்டணிகள் ஒரு ஆண்டு கூட நீடித்தது கிடையாது. ஆனால் திமுக தலைமையில் கூட்டணி 8 ஆண்டு காலமாக நீடித்து வருகின்றது. இது ஒரு கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி. 2026 ல் சட்டமன்ற தேர்தலுக்கு பேச்சுவார்த்தை குழு அமைத்து சீட் குறித்து பேசுவோம்.

எடப்பாடியை யார் முதல்வராக்கியது?

அதிமுக என்ற திராவிட கட்சி அழிவு பாதையை அவர்கள் தேர்வு செய்து இருக்கின்றனர். தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். பாழும் கிணற்றில் போய் அவர்களாக விழுந்து இருக்கின்றனர்.

அவர்கள் விழுந்தது இல்லாமல் எங்களையும் சேர்த்துக்கொள்ள பார்க்கின்றனர். அரசியல் தலைவர்களுக்கு நம்பகத்தன்மை வேண்டும். எடப்பாடியை யார் முதல்வராக்கியது? சசிகலாதான் முதல்வராக்கினார். அவர்கதி அதோகதியானது.

ஓபிஎஸ் , எடப்பாடியை ஆதரித்து அவரது ஆட்சியை காப்பாற்றினார்கள். அவர் கதி என்ன ஆனது?இதனால் தான் நம்பகதன்மையற்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி என சொல்கிறோம்” என முத்தரசன் ஆவேசமாக பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share