டிஜிட்டல் திண்ணை: முஸ்லிம் ஓட்டு… எடப்பாடி எடுத்த திடீர் சர்வே!

Published On:

| By Aara

Muslim vote a sudden survey taken by Edappadi

வைஃபை ஆன் செய்ததும்  முன்னாள் அமைச்சர் கருப்பணன் பேச்சு அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விளக்கம் பற்றிய செய்திகள்  இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக அதற்கு இன்று வரை விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.  பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தேசியத் தலைமை விளக்கம் அளிக்கும் என்று கூறிவிட்டார். அதேநேரம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கருப்பணன், ‘2026 சட்டமன்றத் தேர்தலில்  அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க  பாஜக அதிமுகவை வலியுறுத்தியது. அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம்’ என்று பேசியிருந்தார்.  கூட்டணி முறிவு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேச வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் உத்தரவிட்டும், இதுபோல கருப்பணன் பேசியது எடப்பாடியை கோபமாக்கியது.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 30) கிருஷ்ணகிரியில் இருந்தபடி துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.  ‘அப்படியெல்லாம் பாஜக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கருப்பணன் சமூக தளங்களைப் பார்த்து நம்பி சொல்லியிருப்பார்’ என்று மறுத்தார் முனுசாமி.

இப்படியாக கூட்டணி முறிவு குறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதிமுக. அதேநேரம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முடிவில் பின் வாங்குவதில்லை என்று உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்.
2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 37. அப்போது அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 33. வெறும் நான்கு சதவிகிதம் வாக்குகள்தான் வித்தியாசம். இந்த நிலையில் தமிழகத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில்  7 முதல் 8% என்று இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகளால் கணிக்கப்பட்டுள்ளது.  இப்போது பாஜகவின் கூட்டணியில் இருந்து முற்று முழுதாக அதிமுக வெளியே வந்திருப்பதால், அதிமுகவை நோக்கி கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

Muslim vote a sudden survey taken by Edappadi

2019, 2021 பொதுத் தேர்தல்களில் பாரம்பரியமாக அதிமுகவைச் சேர்ந்த முஸ்லிம் நிர்வாகிகள் கூட அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்ற நிலை நிலவியது.  பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டபின் இந்த நிலை மாறும் என்று கருதுகிறார் எடப்பாடி.

ADVERTISEMENT

இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்றின் துணையோடு தமிழ்நாடு முழுதும் ஒரு சர்வே நடத்தியிருக்கிறார் எடப்பாடி. அதாவது பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு அதிமுக தொண்டர்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள்,  பாஜக கூட்டணியை முறித்ததால் முஸ்லிம்கள் வாக்கு மீண்டும் அதிமுகவுக்கு வருமா என்பதுதான் இந்த சர்வேயின் நோக்கம். சர்வே முடிவில்  பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு அதிமுகவின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியை விட்டு விலகியதால் அதிமுகவுக்கு இப்போது 30% முஸ்லிம் வாக்குகள் கிடைக்கலாம் என்று அந்த சர்வேயில் தெரியவந்திருக்கிறது. மேலும்  பாஜகவுடனான கூட்டணி பற்றி இன்னும் சந்தேக நிழல் முஸ்லிம்களிடையே இருப்பது பற்றியும் அந்த சர்வேயில் தெரிந்துள்ளது.

முஸ்லிம் வாக்குகள் எதுவுமே இல்லாது இருந்த நிலையில் 30% என்பது எடப்பாடிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில். இதை அதிகப்படுத்தும் நோக்கில்தான் மூத்த தலைவர் அன்வர் ராஜாவை அமைப்புச் செயலாளராக நியமித்த எடப்பாடி, அடுத்தடுத்து சில முஸ்லிம் கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

அல்டிமேட் சவுண்ட் எபெக்டில் அட்டகாசமான எபிக்பூம் ஸ்பீக்கர்!

சசிகுமாரின் “எவிடன்ஸ்” : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share