கிச்சன் கீர்த்தனா: கீரை – அவல் உப்புமா

Published On:

| By Minnambalam

உப்புமாவா என்று வெறுப்பவர்கள் பலர். அவர்கள் விரும்பி சாப்பிட வைக்க சத்தான இந்த கீரை – அவல் உப்புமா உதவும். ரத்த சோகைக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்து. அவல் விரைவில் செரிமானமாகும். இந்த இரண்டும் சேர்ந்த இந்த உப்புமா அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.

என்ன தேவை?

ADVERTISEMENT

முருங்கைக்கீரை – ஒரு கப்
சிவப்பு அவல் (கெட்டி அவல்) – ஒரு கப்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – அரை மூடி
கொத்தமல்லித்தழை  – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

கீரையைச் சுத்தம் செய்து லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். அவலை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ADVERTISEMENT

நறுக்கிய வெங்காயம் நிறம் மாறியதும், வேகவைத்த முருங்கைக்கீரையை அந்தத் தண்ணீருடனேயே சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும்.

ஊறிய அவலை தண்ணீரை வடித்துவிட்டு இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் புரட்டி மூடி போட்டு அடுப்பைக் குறைத்து ஐந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையைச் சேர்த்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிறுகீரை, முளைக்கீரை பயன்படுத்தி செய்யும்போது வெங்காயத்துடன் வதக்கியே செய்யலாம். முருங்கைக் கீரை வேக நேரமாகும் என்பதால் குக்கரில் வேகவிட்டால் விரைவில் செய்யலாம்.

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

கோதுமை பிரெட் முட்டை உப்புமா!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share