கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. Murugesan Kannagi honor killing case
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே குப்பநத்தம் புதுகாலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேசன். பொறியியல் பட்டதாரியான இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகியைக் காதலித்து, 2003 மே 5ஆம் தேதி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.
எனினும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பால் இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். பின்னர் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள, உறவினர் வீட்டில் கண்ணகியை விட்டுவிட்டு, முருகேசன் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வண்ணாங்குடி காட்டில், தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்தசூழலில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது கண்ணகியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக முருகேசனையும் கண்ணகியையும், விருத்தாசலம் அருகே குப்பநத்தம் கிராம மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை ஊற்றி இருவரையும் கொலை செய்து எரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் போலீசார், முருகேசன், கண்ணகி இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் தங்களது பிள்ளைகளைக் கொலை செய்ததாக இரு வீட்டார் தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. கண்ணகியின் தந்தை துரைசாமி அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், அஞ்சாப்புலி, ராமதாஸ் ஆகியோரும் அப்போது விருதாச்சலம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த செல்லமுத்து மற்றும் உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2021, செப்டம்பர் 24 அன்று உத்தரவு பிறப்பித்த மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் முருகேசன் தரப்பைச் சேர்ந்த அய்யாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோரை விடுவித்தார்.
கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. கண்ணகியின் அப்பா துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, வெங்கடேசன், மணி ஆகிய ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தண்டனைக்கு உள்ளானவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருதுபாண்டியனுக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதை இன்று (ஏப்ரல் 28) விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. Murugesan Kannagi honor killing case
