அணிவகுக்கும் பக்தர்கள்: களைகட்டும் முருகன் மாநாடு… முழு விவரம் இதோ!

Published On:

| By Minnambalam Login1

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை பழனியில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்வு ஆகஸ்ட் 24 மற்றும் 25 என இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.

வரலாற்றிலேயே முதல் முறையாகத் தமிழ் கடவுள் முருகனின் பெருமைகள் மற்றும் வழிப்பாட்டு நெறிமுறைகளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்துவதற்காக, இந்த மாநாட்டைத் தமிழக அரசு நடத்த இருக்கிறது.

இதுகுறித்து இன்று கோவையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முருக பக்தர்கள், வெளிநாடுகளில் முருகன் கோவில்களை நடத்தி வரும் பரம்பரை அறங்காவலர்கள், வெளிநாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோவில்களின் தலைமை பூசாரிகள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்” என்றார்.

மாநாடு விபரங்கள்

இந்த மாநாட்டின் தொடக்கவிழா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபானி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை நடக்கவிருக்கிறது.

தொடக்க விழாவில் மலேசியத் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்து நாட்டின் இப்ஸ்விச் மேயர் இளங்கோ இளவழகன், தென் ஆப்பிரிக்கா மாகாண சட்ட அவை உறுப்பினர் லெஸ் கவண்டர், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், மலேசியாவின் சிலாங்க்கூர் மாநில செயற்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வேரமன் மற்றும் மலாக்கா மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

மேலும் இத்தொடக்கவிழாவில் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசர்களான ஆர்.சுப்ரமணியன், ஆர்.சுரேஷ்குமார், பி.வேல்முருகன், பி.புகழேந்தி மற்றும் வி.சிவஞானம் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் திருவாவடுதுறை, திருவண்ணாமலை, பேரூர், குருமகா சந்நிதானம், மதுரை, தருமபுரம், மயிலம் போன்ற 12 ஆதினங்கள் நல் ஆசியுரை வழங்குவார்கள்.

நாளை காலை 9.30 தொடங்கும் இந்த மாநாடு, ஆகஸ்ட் 25 இரவு 8 மணிக்கு நிறைவு பெரும் இந்த மாநாட்டுற்கு அனுமதி இலவசம். வருபவர்கள் அனைவருக்கும் பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படும்.

murugan maanaadu

இந்த விழாவில் விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்படும். மேலும் முருகன் கடவுள் சம்பந்தமான பாடல்கள், நாடகங்கள், நாட்டியங்கள், கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழா முடிவில் நீதியரசர் பி.வேல்முருகன் கருத்தரங்கங்கள், நாட்டியங்கள் போன்றவற்றில் பங்கெடுத்தவர்களுக்கு விருதுகள் வழங்குவார்.

இதுமட்டும் அல்லாமல் முருக பக்தர்கள் மகிழும் வகையில் முருகனின் மூலவர் காட்சிகள், மெய் நிகர் காட்சிகள், முப்பரிமாண பாடலரங்கம் மற்றும் ஆய்வரங்கம் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

மீண்டும் இணையும் குருவாயூர் காம்போ!

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

உலகின் வலிமையான புட் பிராண்ட் அமுல்… சாதித்தது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share