முரசொலி மூல ஆவணங்களை வெளியிடாதது ஏன்? பாமக

Published On:

| By Balaji

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முரசொலி அலுவலக இடத்தின் பட்டாவை ஸ்டாலின் வெளியிட, இரு தரப்புக்கும் இடையே அறிக்கைப் போர் உண்டானது. இதற்கிடையே பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்பதன் உண்மை நிலை குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘ராமதாஸ் கூறியதை கேட்டு, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல சீனிவாசன் மனு அளித்துள்ளார்” என்று கருத்து தெரிவித்தார். மேலும், முரசொலி நிலம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க ராமதாஸ் முன்வருவாரா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு இன்று (அக்டோபர் 24) பதிலளித்துள்ள பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, “பதற்றம் மற்றும் நடுக்கத்தின் காரணமாக இந்த விஷயத்தில் ஏற்கெனவே கூறியதையே திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும், மீண்டும் உளறிக் கொண்டிருக்கிறார். முரசொலி விஷயத்தில் பதற்றப்படுவதற்கோ, உண்மையை அம்பலப்படுத்தி விட்டார் என்ற கோபத்தில் ராமதாஸ் மீது வசை மாறி பொழிவதற்கோ எந்தத் தேவையும் இல்லை” என்று குறிப்பிட்டவர்,

ADVERTISEMENT

“முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985 ஆம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960-களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால், முரசொலி நிலம் தொடர்பான 1924 ஆம் ஆண்டின் மூல ஆவணம் முதல் 1960-களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் தானே மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்க வேண்டும் என்று ராமதாஸ் எதிர்க்கேள்வி எழுப்பியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? முரசொலி நிலம் குறித்த 1985 ஆம் ஆண்டின் பட்டாவை எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில் அந்த நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டு, முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ராமதாஸ் கேள்வி எழுப்பி பல நாட்களாகியும் அதற்கு பதிலளிக்க முடியாத ஸ்டாலின், குழந்தைகள் விளையாடுவதைப் போல அரசியலில் இருந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாகக் கூறி வருகிறார் என்று சொன்ன ஜி.கே.மணி, “தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு கொடுத்த சீனிவாசனை ராமதாஸின் கைப்பாவை என விமர்சித்திருக்கிறார். நாட்டு நலன் கருதி ராமதாஸ் எழுப்பும் கேள்விகளை மீண்டும் எழுப்புபவர்கள் எல்லாம் ராமதாஸின் கைப்பாவை என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் ராமதாஸின் கைப்பாவைதான். இது ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம் தானே தவிர, வருத்தப்படத்தக்கது அல்ல” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி நிலம் தொடர்பான மூல ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும் அவற்றை வெளியிட மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் என்று கேட்டுள்ள ஜி.கே.மணி, “முரசொலி நிலத்தை அதன் உரிமையாளர்கள் முறைப்படி வாங்கியிருந்தால், அந்நிலத்துக்கான 1985 ஆம் ஆண்டு பட்டாவைப் போலவே, நிலப்பதிவு ஆவணங்களும், மூலப் பத்திரங்களும் அவர்கள் வசம் இருந்திருக்க வேண்டும். ஆனால், நிலப்பதிவு ஆவணங்களை மு.க.ஸ்டாலின் இப்போது வரை வெளியிடவில்லை. அப்படியானால் அவர்களிடம் ஆவணங்கள் இருக்கின்றனவா, இல்லையா? சவால்களைக் கண்டு அஞ்சி ஓடிக்கொண்டிருப்பது மு.க.ஸ்டாலின்தான். அவரது பக்கம் நியாயமிருந்தால், அவரது மடியில் கனமில்லை என்றால் மூல ஆவணங்களை வெளியிடாதது ஏன்?” என்றும் வினா எழுப்பியுள்ளார்.

அரசியல் அறம் என்பதற்கு மு.க ஸ்டாலினுக்குப் பொருள் தெரிந்திருந்தால் மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டுதான் அரசியல் பணிகளைத் தொடர வேண்டும். அதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா? என்றும் சவால் விடுத்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் எங்கு இருந்தாலும் மீட்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு. அதுமட்டுமின்றி, சென்னை அண்ணா அறிவாலயம், தமிழகத்தின் மற்ற மாவட்ட தலைநகரங்களில் திமுக தலைமை அலுவலகம் அமைக்க முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்கள் என எங்கு, யாருடைய நிலம் மோசடி செய்யப்பட்டிருந்தாலும் அதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசையும், நீதித்துறையையும் கேட்டுக் கொள்ள பாமக தயார்? பொய் வணிகர் மு.க.ஸ்டாலின் தயாரா? தெளிவான பதிலை திமுக அளிக்க வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார் ஜி.கே.மணி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share