முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 17). இதனை முன்னிட்டு கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்,
முரசொலி மாறனை நினைவு கூர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞரின் மனசாட்சி. மாநில சுயாட்சியின் மறுவுருவம். கழகத்தின் அறிவுக்கருவூலமாக திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90 ஆவது பிறந்தநாள் இன்று,
கொள்கை உறுதியோடு இயக்கம் வளர்த்த முரசொலி மாறனின் புகழைப் போற்றுவோம்” என்று குறிப்பிட்டு மரியாதை செலுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே 3 நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மதுரையில் முரசொலி மாறனுக்கு மரியாதை செலுத்தினார்.
பாகமுகவர்கள் கூட்டத்துக்காக மதுரையில் இருந்து ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், வழியில் சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் உள்ள முரசொலி மாறன் புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அண்ணா மன்றத்திலிருந்த நூல்களையும் பார்வையிட்டார்.
பிரியா