மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மன்குர்ட் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரான பிரதாமேஷ் போக்சே அங்குள்ள தள்ளுவண்டி கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மே 7-ஆம் தேதி போக்சே காலமானார்.
இதனையடுத்து தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் ஆனந்த் காம்ப்ளே, அஹமது ஷேக் ஆகியோர் மீது ஐபிசி 34, 304 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் இது முதல்முறை அல்ல.
கடந்த ஏப்ரல் 2022-ஆம் ஆண்டு கேரள மாநிலம் செருவதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 52 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. இதில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பெண் தேவநந்தா உயிரிழந்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலம் மாவெலிப்புரம் பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், செப்டிசீமியா, தீவிர ரத்த ஓட்ட தொற்று அவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, “ஷவர்மாவில் சேர்க்கப்படும் சிக்கனை தயார் செய்தல், அதனை ஸ்டோர் செய்து வைப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படுகிறது. ஒருவேளை இறைச்சி முழுமையாக வேகாமல் இருந்தால் ஃபுட் பாய்சன் ஏற்படும்.
ஷவர்மாவிற்காக பயன்படுத்தப்படும் இறைச்சியானது பல மணி நேரங்களாக மெதுவான சூட்டில் வறுக்கப்படுகிறது. இதனால் கடைகளில் கூட்ட நெரிசலான நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு வேகாத இறைச்சியால் செய்யப்பட்ட ஷவர்மா கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
மேலும், ஷவர்மா தயாரிக்க அசுத்தமான பாத்திரங்களை பயன்படுத்துதல், கேடுவிளைவிக்கும் சாஸ்களை பயன்படுத்துவதும் ஃபுட் பாய்ஸ்சனுக்கு வழிவகுக்கும். அதேபோல, குளிர்சாதன பெட்டியிலிருந்து நீண்ட நேரத்திற்கு இறைச்சியை வெளியில் வைத்திருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாய் பல்லவிக்கு “அமரன்” டீமின் பிறந்தநாள் கிஃப்ட்..!
ஹரியானா பாஜக ஆட்சிக்கு ஆபத்தா? – ஓரணியில் எதிர்க்கட்சிகள்… தடுமாறும் பாஜக!