மும்பை தாக்குதல் : இந்தியாவின் ரகசிய ஆப்ரேஷன் – தஹாவூர் ராணா அழைத்து வரப்பட்டது எப்படி?

Published On:

| By Kavi

மும்பை நகரில் 2008 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்கா போலீஸ் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்த புகைப்படத்தை யுஎஸ் தூதரகம் இன்று (ஏப்ரல் 11) வெளியிட்டுள்ளது. Mumbai Attacks How was Tahawur Rana

கடந்த 2008ஆம் ஆண்டு கடல்வழியாக வந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 10 தீவிரவாதிகள், மும்பையில் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிகழ்வு நடந்த நவம்பர் 16ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்பவரை மட்டும் உயிரோடு பிடித்தனர். 

அவரிடம் 4 ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மும்பையில் உள்ள எரவாடா சிறையில் தூக்கிலிட்டனர். 

தொடர்ந்து இந்த கொடிய நிகழ்வுக்கு மூளையாக செயல்பட்டவர்களையும் இந்திய விசாரணை அமைப்பு கண்டுபிடித்தது. 

இதில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலாணி மற்றும் அவரது கூட்டாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா(64) ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. 

இதில்  டேவிட் கோல்மன் ஹெட்லி, அமெரிக்காவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு 2009ல் அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். 

இந்த சூழலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை  ஒப்படைக்கும்படி, இந்திய அரசு சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டது. 

அதன்படி கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடந்த 2023ல் உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து தஹாவூர் ராணா சட்ட போராட்டம் நடத்தினார். முதலில் அவரது மனுவை கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துவிட, அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஜனவரி 21ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவும் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. 

இப்படி தஹாவூர் ராணாவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. 

இந்தநிலையில் தான் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற உயரதிகாரிகள் குழு, தஹாவூர் ராணாவை உச்சக்கட்ட பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அழைத்து வந்தது. அங்கு சட்ட ரீதியான நடைமுறைகளை முடித்துக்கொண்டு புறப்பட்ட சிறப்பு விமானம் நேற்று (ஏப்ரல் 10) டெல்லியில் தரையிறங்கியது. 

பாதுகாப்பாக அழைத்து வந்தது எப்படி?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஹாவூர் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 8ஆம் தேதி மாலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

அவரை  இந்திய வெளியுறவுத் துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏப்ரல் 9ஆம் தேதி அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். இந்த சிறப்பு விமானத்தின் வழித்தடம், விவரங்கள், தரையிறங்கும் நேரம் என அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

விமானத்தில் லைவ் டிராங்கிங் கூட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன. அந்த விமானத்தை இங்கிருந்தவாறு புலனாய்வு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர். 

இந்த பயணத்தின் போது தற்கொலை முயற்சி உள்ளிட்ட எந்த அசம்பாவிதங்களும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக தஹாவூர் ராணாவின் கைகள் என்.ஐ.ஏ அதிகாரிகளின் கைகளுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வருகின்றன.

அதேசமயம் அமெரிக்காவில் இருந்து வரும் வழியில் எரிப்பொருள் நிரப்புவதற்காக ஒரே ஒரு இடத்தில் மட்டும் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கு, எந்த நேரத்தில் தரையிறக்கப்பட்டது என்ற விவரங்களும் யாருக்கும் தெரியாது. 

இப்படி ரகசியமாக மிகுந்த பாதுகாப்புடன்  இந்தியாவுக்குள் நுழைந்த சிறப்பு விமானம் டெல்லி பாலம் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 

உடனே தஹாவூர் ராணாவை என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்திய சட்ட நடைமுறைப்படி கைது செய்தனர்.  தொடர்ந்து அவரை முழு பாதுகாப்புடன், உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத வகையில் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.  

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 18 நாள் என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகித்த என்.ஐ.ஏ துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜெயா ராய் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு இப்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. என்.ஐ.ஏ அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. 

ராணாவிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் பாகிஸ்தான் பங்கு தொடர்பான பல ரகசியங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தநிலையில் தஹாவூர் ராணா பாகிஸ்தானைச் சேர்ந்தவரே இல்லை என்றும் அவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு  செய்தி தொடர்பாளர் சப்காத் அலிகான் கூறியுள்ளார்.  அதாவது தஹாவூர் ராணா பாகிஸ்தான் ஆவணங்களை 20ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 உயிர்களின் துயர மரணத்திற்கு வழிவகுத்த தாக்குதல்களை சிலர் மறந்திருக்கலாம்.  ஆனால் ராணாவை நாடு கடத்துவது, ஆறு அமெரிக்கர்கள் மற்றும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடுவதில் ஒரு முக்கியமான படியாகும்” என்று கூறப்பட்டுள்ளது. Mumbai Attacks How was Tahawur Rana

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share