முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் மீது 1895ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணையை கட்ட மற்றும் வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரியும்,
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்