பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இனி, தானே கட்சியின் தலைவராகவும் செயல்பட போகிறேன் என ஏப்ரல் 10 காலை அறிவித்தார். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து நேற்று ஏப்ரல் 12 இரவு அன்புமணி ராமதாஸ், ‘ கட்சியின் பொதுக்குழு கூடி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தது. தேர்தல் ஆணையமும் என்னை அங்கீகரித்துள்ளது எனவே நான் தான் தலைவர்’ என்று அறிக்கை வெளியிட்டு தன் மௌனத்தை கலைத்தார். Mukundan meets Anbumani… What’s going
அது மட்டுமல்ல, ‘ டாக்டர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன்’ என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அங்கே டாக்டர் ராமதாசை சந்தித்து இருவரும் சமரசமாக செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். டாக்டர் ராமதாஸின் மகள்கள் காந்தி, கவிதா ஆகியோரும் அவரோடு தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக ராமதாஸ் கூறி வருகிறார்.
இந்த நிலையில்… பாமகவின் இளைஞரணி தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்ட முகுந்தன் இன்று அன்புமணி ராமதாசை சந்தித்ததாக பாமக வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.
முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்ததில் இருந்துதான் பொதுக்குழு மேடையிலேயே ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக சித்திரை முழு நிலவு மாநாட்டுக்காக வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முகுந்தன் இளைஞரணி மூலமாக மாநாட்டு ஆயத்த கூட்டங்களை நடத்தி இருக்கிறார்.
இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தான்… ஏப்ரல் 10ஆம் தேதி காலை திடீரென அன்புமணியை செயல் தலைவராக டி பிரமோட் செய்தார் ராமதாஸ். Mukundan meets Anbumani… What’s going
இரண்டு தலைவர்களையும் பாமகவின் நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில்… நேற்று இரவு நான்தான் தலைவர் என அறிக்கை வெளியிட்ட அன்புமணி இன்று ஏப்ரல் 13 பகல் மாமல்லபுரம் அருகே நடக்க இருக்கிற சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டார். அன்புமணி வந்திருக்கிறார் என தெரிந்ததும் பாமக தொண்டர்கள் ஏராளமானோர் அவரைப் பார்க்க திரண்டனர்.

அப்போது அவருடன் பாமகவின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “நீங்கள் என்ன கேட்கப் போறீங்கனு எனக்குத் தெரியும். இது எங்களுடைய உள்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம். அதேநேரத்தில் மருத்துவர் அய்யாவின் வழிகாட்டுதலோடு அவரது கொள்கையை நிலைநாட்ட, பாமவை ஒரு கட்டத்தில் ஆளுங்கட்சியாக மாற்றும் நோக்கத்தில் எல்லாரும் சேர்ந்து கடுமையா உழைப்போம்” என்று சொல்லி நன்றி கூறி புறப்பட்டார்.