தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆயிரம் கோடி மதிப்புள்ள போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானத்தை வாங்கியுள்ளார். இந்த விமானத்தை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்.
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் மொத்தம் 9 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருந்தன. தற்போது 10-வதாக போயிங் 737 ரக விமானம் வாங்கப்பட்டுள்ளது.
அம்பானியின் ரசனைக்கு ஏற்ப விமானத்தின் உள் பகுதி சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பாசல் நகரை சேர்ந்த bassel Mulhouse Freiberg என்ற நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. பறக்கும் பங்களா என்று சொல்லும் அளவுக்கு விமானத்தின் உட்பகுதி அட்டகாசமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்து புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், விமானத்துறை நிபுணர்கள் அப்படித்தான் கணித்துள்ளனர்.
அதோடு ஜெனிவா , லண்டன், பெசல் நகரங்களுக்கிடையே விமானத்தை பலமுறை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பின்னரே, அம்பானி குடும்பத்தினரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பெசல் நகரில் இருந்து இந்த விமானம் புது டெல்லிக்கு வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட 6, 236 கிலோ மீட்டரை 9 மணி நேரத்தில் கடந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் தற்போது, இந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும் . இந்த விமானம் 118.5 மில்லியன் டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது.
இந்தியாவிலுள்ள அதிக விலை கொண்ட விமானம் இதுதான். இரட்டை இன்ஜின் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எங்கும் தரையிறங்காமல் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பறக்கும் திறன் இந்த விமானத்துக்கு உள்ளது. அதிக பாதுகாப்பு கொண்ட விமானமாகவும் இது பார்க்கப்படுகிறது. தங்களது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி முகேஷ் அம்பானி இந்த விமானத்தை வாங்கியதாக சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மீண்டும் ரூ.55,000-ஐ கடந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!