“அமைதியாக இருங்கள்…” : வங்கதேச தலைமை ஆலோசகர்!

Published On:

| By Minnambalam Login1

students against discrimination

வங்கதேசத்தில்  நடந்த மாணவர் புரட்சியால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவிற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தப்பி வந்தார்.

இதற்கடுத்து மாணவர்களின் எச்சரிக்கைக்கு இணங்கி, ஜனாதிபதி முஹமது ஷஹபுத்தின் நேற்று மதியம் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, முஹமது யூனுஸை தலைமை ஆலோசகராக நியமித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் முஹமது யூனுஸின் ‘யூனுஸ் மையம்’  இன்று வெளியிட்ட அறிக்கையில் ” இரண்டாவது வெற்றி தினத்திற்கு வித்திட்ட துணிச்சல் மிக்க மாணவர்களுக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய எதிரிகளை உருவாக்காதீர்கள். அமைதியாக இருந்து, புதிய வங்கதேசத்தை உருவாக்கத் தயாராகுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ததற்கும், இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கும் முக்கிய காரணம் ‘பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் இயக்கம்’.

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயர்நீதி மன்றம், அரசாங்க வேலைகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இடங்களை ஒதுக்கியது சரி என்று வழங்கிய தீர்ப்பின் விளைவாக தான் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினார்கள். படிப்படியாக இந்த மாணவர்கள் ‘பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து போராட்டத்தை மேலும் முன் நகர்த்தி சென்றார்கள்.

மாணவர் எழுச்சிக்குக் காரணம் students against discrimination

ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால தொடர் ஆட்சியில் வங்கதேசத்தின் பொருளாதாரம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும், மறு பக்கம் எதிர்க்கட்சிகளின் சுதந்திரம் படிப்படியாக நசுக்கப்பட்டுக்கொண்டே வந்தன. அரசாங்கத்தை விமர்சித்து எழுதும் பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் வந்தார்கள்.

ADVERTISEMENT

இது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பின்மையும் தலைவிரித்து ஆடியது. இன்றுவரை கிட்டத்தட்ட 180 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஜூன் மாதம் வெளியான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாட்டின் நிலைமையைக் கண்டு கோபமாக இருந்த மாணவர்களை ‘பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் ஒன்று சேர வைத்து, வீதியில் இறங்கி போராட தூண்டியது.

ஆரம்பத்தில் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக நஹித் இஸ்லாம், அபு சையத் போன்றவர்கள் செயல்பட்டார்கள். ஜூலை மாதம் 16-ஆம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அபு சையத்தை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிகழ்வு உலகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது. பல நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் போராட்டக்காரர்களை ஷேக் ஹசீனா ‘ரசாக்கர்கள்’ என்று இழிவுபடுத்தினார்.

1971 வங்கதேச சுதந்திர போரில், பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவிய நபர்களை தான் “ரசாகர்” என்று கூறுவார்கள். அத்தகையச் சொல்லை மாணவர்களுக்குப் பயன்படுத்தியது அவர்களை மேலும் கொதிப்படையச் செய்தது.

ஷேக் ஹசீனா பதவி விலகுவதற்கு முன் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலீசாராலும் ராணுவத்தாலும் சுட்டுக்கொள்ளப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி கிட்டத்தட்ட 100 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக நஹித் இஸ்லாம், ஆசிப் மஹ்மூத் மற்றும் அபு பக்கர் செயல்பட்டார்கள். இவர்கள் தான் நேற்று நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஷேக் ஹசினா எங்கே? இங்கிலாந்து செல்ல திட்டம்!

“ஷேக் ஹசீனா இனி வங்கதேசம் செல்ல மாட்டார்”: மகன் சஜீப் வாசெத் ஜாய் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share