அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் வீடு உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வந்தனர்.
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பிரச்சாரத்தை தடுத்ததாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி பாமக நகர செயலாளர் ராமலிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக, 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலை குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் முபாரக் வீட்டில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். சுமார் 3 மணி நேரம் சோதனையை செய்து விட்டு அதிகாரிகள் திரும்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக், “அரசியல் உள்நோக்கத்தோடு இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது. இது போன்ற பொய் சோதனைகளை SDPI கட்சி சட்டப்படி எதிர்கொள்ளும்.
சோதனையை முடித்து எனது செல்போனை மட்டும் எடுத்து சென்றுள்ளார்கள். அதை தவிர வேறு எந்த ஆவணமும் இங்கு இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள் .
திமுகவை எப்படி அமலாக்க துறை மூலம் மத்திய அரசு மிரட்டி வருகிறதோ, அது போல இஸ்லாமிய மக்களை NIA மூலம் மத்திய அரசு அச்சுறுத்த நினைக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நடக்காது.
தஞ்சையில் நடைபெற்ற கொலை வழக்கை காரணம் காட்டி சோதனை நடந்தது. அதற்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருப்புவனம் கொலை வழக்கில் நீதி கேட்டு போராடியதே SDPI தான்” என்று தெரிவித்தார்.
சரவணன் நெல்லை

Comments are closed.