அமெரிக்காவின் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகிதம் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக வெளிநாட்டு வர்த்தக ஆலோசகர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு நேற்று (ஆகஸ்ட்- 27) முதல் அமலுக்கு வந்துள்ளதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி நடைபெறுகிறது. இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத வரி வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து, அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை நிராகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்கள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அவற்றை பெற அமெரிக்க வர்த்தகர்கள் விலை சலுகை எதிர்பார்க்கின்றனர். ஆனால் குறைந்த லாபத்துடன் ஏற்றுமதி நடைபெற்று வரும் நிலையில் 2 முதல் 5 சதவீதம் விலை சலுகை அளிக்கத் திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். அமெரிக்க வர்த்தகர்கள் கூடுதல் விலை சலுகை எதிர்பார்ப்பதால் கடும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அதே சமயம் வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களது ஆர்டர்களை தாமதப்படுத்தி பொறுமையாகச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் ஆடைகள் தேக்கத்தை தவிர்க்கும் பொருட்டு உற்பத்தி திறன் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை நம்பி உள்ள இதர நிறுவனங்கள் சங்கிலி அமைப்பைப் போல பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக ஆலோசகர் லோகநாதன் என்பவர் கூறுகையில் ,” திருப்பூரில் சிறு குறு பின்னலாடை நிறுவனங்கள்தான் பெருமளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. 10 முதல் 15 சதவிகிதம் வரைதான் பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. டிரம்பின் 50 சதவிகித வரி விதிப்பால் அமெரிக்காவுடன் செய்யப்படும் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றாலும் நாம் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும். சிறிது காலம் நிறுவனங்கள் மூடப்பட்டாலும் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். இதனால் பணி இழக்கும் அபாயம் அதிகம் உள்ளது. அதனை மீட்டு கொண்டு வருவது மிகப்பெரும் சவாலான நிலையை ஏற்படுத்தி விடும்.
இதனால் புதிய வடிவமைப்பு ஆடைகளை கொண்டு வருவதன் மூலமும், மற்ற சந்தைகளை விரிவுபடுத்துவதன் மூலமும் இதன் தாக்கத்தை ஓரளவு குறைக்கலாம் என தெரிவித்தார். மேலும் உடனடியாக வரி விதிப்பு தாக்கம் தெரியாவிட்டாலும் அடுத்த 15 நாட்களில் தெரியவரும். அப்பொழுது எத்தனை நிறுவனங்கள் இதனை தாக்குப் பிடிக்கிறது என்பதும் எத்தனை நாட்கள் எவ்வளவு நிறுவனங்கள் மூடப்படும் என தெரிய வரும் என்றார்.
