‘நான் மந்திரியா இருக்கணுமா, வேணாமா?’ -தர்மபுரி அதிமுக, பாமக புள்ளிகளிடம் எம்.ஆர்.கே. நடத்தும் ரகசிய டீலிங்! பின்னணியில் உதயநிதி

Published On:

| By Aara

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லாத நிலையில்… ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் அமைச்சர்களும், பொறுப்பு அமைச்சர்களும் கடைசி கட்ட வெற்றி வியூகத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் தேர்தல் பரப்புரை வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மறைமுகமான செயல் திட்டங்களும் மளமளவென நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படித்தான் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரடி செயல் திட்டத்தோடு மறைமுக செயல் திட்டத்திலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு முதல் அதிமுகவின் தர்மபுரி மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய புள்ளிகளின் வட்டாரத்தில் ஒரு விவாதம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

“நம்ம முன்னாள் அமைச்சருக்கும் எம்எல்ஏவுக்கும் இன்னும் பல நிர்வாகிகளுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. போன் பண்ணியிருக்காராம்.

’என்னய்யா இவ்வளவு ஆக்டிவா இருக்கீங்க? நீங்க என்ன ஜெயிக்கவா போறீங்க? பார்த்து பண்ணுங்கய்யா… நான் மந்திரியா இருக்கணுமா வேணாமா? அந்த பக்கம் அன்புமணி பேமிலில நிக்கிறாங்க. இங்கே நாங்க நிக்கிறோம். நடுவுல நீங்க ஏன்யா குறுக்க வறீங்க?’அப்படினு அதிமுகவை தாஜா பண்ற மாதிரி எம்.ஆர்.கே. பேசியிருக்காரு” என்பதுதான் அதிமுக தர்மபுரி முக்கிய புள்ளிகள் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பேசிய இந்த விஷயத்தை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வரைக்கும் கொண்டு போயிருக்கிறார்கள். அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல்… தர்மபுரி மாவட்ட பாமகவில் இருக்கிற தனக்கு நெருக்கமான சிலரிடமும் கூட எம்.ஆர்.கே. பேசியிருக்கிறார்.

தர்மபுரி தொகுதியிலே பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தர்மபுரி நகர செயலாளர் ரவியின் மகன் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் வழக்கறிஞர் மணி போட்டியிடுகிறார்.

சௌமியா அன்புமணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து பாமகவினர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அன்புமணியின் மகள்களும் களமிறங்கி  சென்டிமென்ட் ரீதியாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். அதிமுகவினரும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் அதிமுக நிர்வாகிகளுக்கும், லோக்கல் பாமக நிர்வாகிகளுக்கும் திமுகவின் பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.விடம் இருந்து போன் கால்கள் பறந்துள்ளன. இதற்கு பின்னணியாக ஏப்ரல் 8-ஆம் தேதி பகலில் நடந்த சம்பவத்தைக் கூறுகிறார்கள் தர்மபுரி திமுகவினர்.

“திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 8 ஆம் தேதி காலை தர்மபுரி தொகுதி பிரச்சாரத்துக்காக வந்தார். வழக்கமான டொயோட்டோ லேண்ட் க்ரூஸர் டிஎன் 23 டிஇ 4567 என்ற எண்ணுள்ள காரில் வந்த உதயநிதிக்கு நல்லம்பள்ளி மேம்பாலம் அருகே உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பனின் மகன் எழில் மறவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உதயநிதியை வரவேற்றார்கள்.

அங்கிருந்து பிரச்சார வேனில் ஏறினார் உதயநிதி. உதயநிதியோடு பிரச்சார வேனில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மாவட்டச் செயலாளர்களும் ஏறினார்கள்.

பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு வேனிலேயே அவர்களுடன் உரையாடினார் உதயநிதி.
‘தர்மபுரி பற்றி எனக்கு வர ரிப்போர்ட் நல்லா இல்லையே…’ என்று உதயநிதி கூற…. எம். ஆர். கே. உடனடியாக, ’இல்ல இல்ல… நாம ஜெயிச்சிடுவோம் தம்பி…’ என்று பதில் அளித்துள்ளார்.

அதற்கு உதயநிதி, ’அண்ணா… நாம ஜெயிக்கறது கன்ஃபார்ம் தான். ஆனா நல்ல லீடிங்ல வரணும். அதுக்கான வேலைகள் இங்க சரியா நடக்கலன்னு எனக்கு புகார் வருது. பாமகவுக்கு எதிரா அதிக லீடிங்ல ஜெயிக்கணும். இது நம்ம கட்சியோட பிரஸ்டீஜ் விஷயம்’ என்று உதயநிதி அழுத்தம் திருத்தமாக சொல்ல… உடனே இரண்டு மாவட்ட செயலாளர்களும், ‘நல்ல லீடிங்ல ஜெயிப்போம்’ என்று அவரிடம் உறுதி அளித்தனர்.

இந்த உரையாடலுக்கு இடையே பிரச்சார பாயின்ட்டான பிஎஸ்என்எல் அலுவலகம் வந்துவிட அதன் எதிரே சுமார் 20 நிமிடங்கள் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. முதல் பாயின்ட்டிலேயே கூட்டத்தை பார்த்து சற்று சுணக்கமான உதயநிதி 20 நிமிடங்களில் முடித்து விட்டார்.

அடுத்ததாக பென்னாகரம் பாயின்ட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன் நல்ல கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அங்கிருந்து இன்பசேகரனை தன்னுடைய வாகனத்தில் அழைத்துக் கொண்டார் உதயநிதி. அடுத்தடுத்த பாயின்ட்டுகளில் பழனியப்பன் பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டி இருந்தார்.

ஏப்ரல் 8 ஆம் தேதி பகல் பொழுதில் பிரச்சார வேனில் வைத்து உதயநிதி மாவட்டப் பொறுப்பு அமைச்சர் எம். ஆர். கே. மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் நடத்திய இந்த உரையாடலின் விளைவு தான் அன்று இரவு எம். ஆர். கே. வை அதிமுக மற்றும் பாமக புள்ளிகளுடன் உரையாட வைத்திருக்கிறது.

இது குறித்து தர்மபுரி திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“அமைச்சர் எம்.ஆர்.கே நல்லாதான் வேலை செய்யுறாரு. ஆனா அவருக்கும் இங்க இருக்குற திமுக நிர்வாகிகளுக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்திருக்கு. தொகுதியில இருக்கிற பிரச்சினைகளை உடனுக்குடன் அவர்கிட்ட கொண்டு போறதுக்கு மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளால் கூட முடியல. ஏன்னா தேவ் ஆனந்த், டாக்டர் தருண் என்ற இரண்டு பேர் கொண்ட டீமை போட்டு.. ’எந்த பிரச்சினையாக இருந்தாலும் இவங்க கிட்ட பேசிக்கங்க’ என்று அமைச்சர் எம்.ஆர்.கே. சொல்லிவிட்டார்.

ஆனால், அவங்களிடம் எல்லா விசயங்களைப் பத்தியும் பேச முடியலை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவை இருக்கும். பொறுப்பு அமைச்சர் கிட்ட தயக்கம் இல்லாம பேசலாம். ஆனா இந்த ரெண்டு பேர்கிட்ட அவ்வளவு உரிமையோடு பேச முடியலங்கிறது தான் உண்மை. தர்மபுரி தொகுதியில் இந்த ஒரு இடைவெளிய இல்லாம பண்ணிட்டார்னா பெரிய லீடிங்க்ல திமுக ஜெயிக்கும்” என்றனர்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தூங்கு மூஞ்சி க்யூட்டி… ஜிவி இசையில் “டியர்” படத்தின் புது பாடல் ரிலீஸ்!

இஸ்ரேல் – ஹமாஸ்: போர் நிறுத்தத்துக்கு எகிப்தின் புதிய திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share