சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா பணிகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கலைஞர் நூற்றாண்டு பூங்கா குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “சென்னை மாநகரில் பசுமையான பூங்கா ரூ.25 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது. செம்மொழி பூங்காவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட மலர் கண்காட்சி பொதுமக்கள் பாராட்டும் வகையில் இருந்தது. பலரும் அந்த மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
தற்போது அமைக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் 40 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடி மாளிகை உருவாக்கப்பட உள்ளது. இந்த கண்ணாடி மாளிகை வண்ணமயமான மலர்கள், அழகிய தாவரங்கள் கொண்ட பசுமை குடிலாக அமைக்கப்படும்.
இந்தியாவில் முதல்முறையாக இந்த பூங்காவில் 10 மாடிகளுடன், 150 அடி உயரம் கொண்டதாக சூப்பர் ட்ரீட் டவர் அமைக்கப்பட உள்ளது. இந்த சூப்பர் ட்ரீட் கோபுரம் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதோடு மின் தூக்கி வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த பூங்காவை சுற்றி பார்ப்பதற்கு 70 மீட்டர் நீளம் கொண்ட சிறிய வகையான கம்பி வட ஊர்தி அமைக்கப்பட உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் நுழைவு வளைவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த அழகியலைக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பச்சை வளைவு நுழைவாயில் கட்டடக்கலை, பூங்காவின் பசுமையான நிலப்பரப்புகளை வசீகரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் அதிநவீன தோட்டக்கலை அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் அரிய வகை தாவரங்கள், மலர்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் தாவரவியல் அறிஞர்கள் தோட்டக்கலை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் தோட்டக்கலையின் சிறப்புகளை அறிய உதவியாக இருக்கும்.
கலைஞர் சாதனைகளை விளக்கும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு பூங்காவில் 1.2 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் உயரமும் கொண்ட கிரானைட் பலகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
பசுமை நிலப்பரப்பு, நீரூற்று வசதி, கழிப்பறை, சிற்றுண்டியகம், மழை நீர் சேகரிப்பு வசதி, அலங்கார மின்விளக்குகள் வசதி, பார்வையாளர்கள் அமருவதற்கான இருக்கை வசதிகள் போன்ற வசதிகளுடன் இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும். இப்பூங்காவின் கட்டுமான பணிகள் வருகின்ற பிப்ரவரி 2025-க்குள் முடிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேதத்திற்காக இதுவரை மத்திய அரசு எந்த வித இழப்பீடும் தரவில்லை. தமிழக அரசு பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்கியுள்ளது” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வணங்காமுடி, இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தலைக்கணம் துடைத்தெறியப்படும்: மோடி காட்டம்!