மானிய விலையில் பாரம்பரிய விதை நெல்கள்: அமைச்சர் வேண்டுகோள்!

Published On:

| By srinivasan

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  2021-2022 ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

இந்த திட்டமானது பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய விதை நெல்களை வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 12) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ADVERTISEMENT

தமிழ்நாட்டில்  உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து, வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.

alt="mrk paneerselvam announced"

மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் 2021-2022 ஆம் நிதியாண்டில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் தமிழகத்தில் முதன்முதலாக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, தூயமல்லி, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை.

ADVERTISEMENT

இத்தகைய மரபுசார் நெல் ரகங்களைத் திரட்டி, பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 33 அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கண்ட 15 பாரம்பரிய நெல் இரகங்களை 200 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்துள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள், நடப்பாண்டில் 10,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், 50 சதவீத மானியத்தில், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 என்ற மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகள், அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும். இத்திட்டமானது சென்னை மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மரபுசார் நெல் ரகங்கள் இனத் தூய்மையுடன், விதைத் தரத்துடன் விநியோகம் செய்யப்படுவதால், இத்தகைய ரகங்களின் சாகுபடிப் பரப்பு கணிசமாக உயரும்.

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு நடப்பு சம்பா பருவம் மிகவும் உகந்தது என்பதால், ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பாரம்பரிய மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

  • க.சீனிவாசன்

ஆம்னி பேருந்து கட்டணம்: ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்… பணத்தைத் திரும்பப்பெற்ற பயணிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share