ஜனநாயக பண்புகளை இழந்து விட்டதா தமிழக காவல்துறை? – சு.வெங்கடேசன் எம்பி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமாக பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார். மேலும் கைது செய்யப்பட்ட மதுரோவின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

வெனிசுலாவின் இயற்கை வளங்களை (குறிப்பாக எண்ணெய்) அமெரிக்கா அபகரிக்க திட்டமிடுவதாக நிபுணர்களும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா, கியூபா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

வெனிசுலாவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் கவலை அளிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 5) சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வேல்முருகன், ஜி. செல்வா, எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில் அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க முடியாத அளவிற்கு ஜனநாயக பண்புகளை இழந்து விட்டதா தமிழக காவல்துறை என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “வெனிசுலாவுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய அடாவடிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட சென்னையில் அனுமதி மறுத்து கைது செய்திருக்கிறது காவல்துறை.

அமெரிக்க தூதரகத்திற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் கூட தடை செய்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை அராஜகமாக கைது செய்துள்ளது.

கூட்டம் கூடவே தடை என்னும் ஜனநாயக விரோத உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா?

அறவழி போராட்டத்தினை அனுமதிக்க முடியாத அளவுக்கு ஜனநாயக பண்புகளை இழந்து விட்டதா தமிழக காவல்துறை?” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share