”கூட்டணி குறித்து யாராவது பேச வேண்டும் என்றால், அகில இந்திய தலைமையிடமோ அல்லது மாநில தலைமையிடமோதான் பேச வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: 234 தொகுதிகளிலும் ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்பதை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்பதை ஒரு இலக்காக வலியுறுத்தி இருக்கிறோம்.
கூட்டணி குறித்து யாராவது பேச வேண்டும் என்றால், அவர்கள் அகில இந்திய தலைமையிடமோ அல்லது மாநில தலைமையிடமோதான் பேச வேண்டும். அதை விடுத்து பொதுவெளியில் பேசுவது தவறு என்பதை அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐவர் குழுவில் நானும் (செல்வபெருந்தகை) இருக்கிறேன், மாநிலத் தலைவராக நானும் இருக்கிறேன், எங்களை மீறி யார் பேசுவது? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கருத்துக்கள் கட்சி நிர்வாகிகளிடம் மட்டுமே பேசப்பட வேண்டியவை.
மைக் முன்னாடி பேசினால் சீட் கிடைக்குமா? இல்ல ஆட்சியில் அதிகாரம் கிடைக்குமா? எங்கே பேச வேண்டுமோ அங்கேதான் பேச வேண்டும். இது போன்ற கருத்துகள், தனிநபர்களின் கருத்துகள்; கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல.
சட்டத்திற்கு மேலானவர் யாரும் இல்லை என்பது போல, கட்சிக்கு மேலானவர் யாரும் கிடையாது. யாராவது தங்களை கட்சிக்கு மேலானவர்களாக நினைத்திருந்தால் அது ஒரு பிரம்மை; அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் அனைவரும் கடைபிடிப்போம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
