ஆதவ் அர்ஜூனாவுக்கு உறுதியாக பதிலடி கொடுப்போம் – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Published On:

| By Pandeeswari Gurusamy

manickam tagore

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக, ரஜினியை மிரட்டியதால் அவர் கட்சி தொடங்கவில்லை என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு உறுதியாகப் பதிலடி கொடுப்போம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களும், பொதுச்செயலாளர்களும் தவெக வாசல் முன்பாக நிற்கிறார்கள். ராகுல் காந்தியும் விஜய் மீது தான் அன்பு வைத்திருக்கிறார். ஆனால் இங்குள்ள வயதான சிலர் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்துவிட்டார்கள்” என்று காங்கிரஸ் கட்சியினர் சிலர் புலம்புவதாகக் கூறி, சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

ஆதவ் அர்ஜூனாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று (மார்ச் 25) தனது எக்ஸ் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில், “ஆதவ் அர்ஜூனாவின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல — அவை கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான வரலாற்றுப் பெரும் இயக்கம். நாங்கள் ஒரு குடும்பமாகச் செயல்படுகிறோம் — ஒன்றாக முடிவு செய்கிறோம், ஒன்றாகச் செயல்படுத்துகிறோம்.

இந்த அமைப்பின் வரலாறும் மரபும் தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் தெளிவாகச் சொல்கிறேன் — காங்கிரஸ் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த அமைப்பில் இடமில்லை.

நாங்கள் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும், தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் காட்டிய மக்கள் பாதையையும் உறுதியாகப் பின்பற்றுகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிளவை உருவாக்கும் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அச்சமின்றி தினமும் போராடி வருகிறார். அவரது தலைமையிலும், மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலிலும் கட்சி உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறது.

பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பதிலடி உறுதியாகவும் கொடுப்போம்.

ADVERTISEMENT

இது சாதாரண கட்சி அல்ல… இது கொள்கைக்கான கட்சி. தியாகம் எங்கள் அடையாளம். ஒற்றுமை எங்கள் வலிமை.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்த மாணிக்கம் தாகூர் எம்.பி., தற்போது ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share