முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு எம்.பி.யான தர்மர் துணை குடியரசு தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனும், எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 9) துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி முதல் நபராக வாக்களித்தார். அவரை தொடர்ந்து எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்.பி தர்மர், சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவளித்துள்ளார்.
சி.பி. ராதா கிருஷ்ணன் தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் அவருக்கு வாக்களிக்க ஓ.பி.எஸ் தரப்பு முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் எம்.பி. தர்மர் சி.பி ராதா கிருஷ்ணனுக்கு வாக்களித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
