‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வனும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜனும் ஆட்சியர் முன்னிலையில் ஒருமையில் பேசி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 2) “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் துவக்க விழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்றது.
அதன்படி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட துவக்க விழா இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங், எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் படம் மட்டும் இருந்தது. இதனால் தங்கத்தமிழ்செல்வன் கோபத்துடனே மேடையேறினார்.
அங்கிருந்த ஆட்சியரிடம் “புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் ஏன் இல்லை?” என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை மேடையிலேயே திட்டினார்.
அதன்பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தங்க தமிழ்ச்செல்வன் வந்தபோது, அதை நான் தான் வழங்குவேன் என மகாராஜன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இருவரும் ஒருமையில் திட்டிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பாதியிலேயே நன்றியுரை தெரிவிக்கப்பட்டு, அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனினும் மருத்துவ முகாம் அங்கு தொடர்ந்து நடைபெற்றது.
