“ஹோட்டல் பிலாலை” தொடர்ந்து “மவுண்ட் ரோடு பிலால்”… என்ன நடக்கிறது சென்னை ஹோட்டல்களில்?

Published On:

| By Kavi

சென்னையில் ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு தற்போது அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. Mount Road Bilal food poison

அந்த வகையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி, சென்னை திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் உள்ள “ஹோட்டல் பிலால்” உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 20 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வாந்தி, மயக்கம், ஃபுட் பாய்சன் ஏற்பட்டதால் இவர்கள் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், “ஹோட்டல் பிலால்” உணவகத்துக்கு சீல் வைத்தார்.

இந்த நிலையில், “மவுண்ட் ரோடு பிலால்” ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. அண்ணா சாலையில் உள்ள இந்த ஹோட்டலில் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் பாயா சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் இரண்டு பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் இருந்து  உணவு பாதுகாப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ், நேற்று மவுண்ட்ரோடு பிலால் ஹோட்டலுக்கு ஆய்வு செய்ய தனது அரசு வாகனத்தில் சென்றிருக்கிறார்.

ஹோட்டல் வாசலுக்கு அரசு வாகனம் வந்ததும் அங்கு ஏற்கனவே காத்திருந்த இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் அதிகாரி சதீஷிடம் பேசினர்.

தொடர்ந்து அவர்கள், தங்களுக்கு வந்த செல்போன் அழைப்பையும் அதிகாரி சதீஷிடம் கொடுத்து பேச சொல்லியிருக்கின்றனர்.

இதையடுத்து ஆய்வு செய்யாமல் மவுண்ட் ரோடு ஹோட்டல் பிலால் வாசலில் இருந்து அரசு வாகனம் புறப்பட்டு சென்றது.

அந்த சமயத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷுக்கு படபடப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று ஈசிஜி எடுத்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “அவர் போன் வந்ததுக்கு எல்லாம் பயப்பட்டு செல்லக்கூடியவர் அல்ல. இவர் அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள குடும்பத்தின் உறவுக்காரர்” என்கிறார்கள்.

நாம் நேரடியாக அவரிடம் பேச தொடர்பு கொண்ட போது, அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டல் மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்பதற்கு அந்த ஹோட்டலுக்கு தொடர்பு கொண்ட போது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.

இந்தசூழலில் மக்களின் நலன் கருதி சென்னையில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் ஆய்வு செய்து உணவு பாதுகாப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Mount Road Bilal food poison

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share