மொட்ட ராஜேந்திரன் ஹீரோவாகக் கலக்கும் ‘ராபின் ஹுட்’!

Published On:

| By Balaji

28 வருடங்களுக்கு முன்னர், 1992ஆம் ஆண்டு அடியாள் வேடத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ராஜேந்திரன்.

அடியாளாக பல திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் வந்து சென்றவருக்குப் பெரும் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. பாலா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான ‘நான் கடவுள்’ திரைப்படம். வெறும் ராஜேந்திரனாக இருந்தவர் அந்தத் திரைப்படத்தில் வெளிக்காட்டிய வில்லத்தனத்தின் மூலமாக ‘நான் கடவுள் ராஜேந்திரனாக’ மாறினார். ஆனால். தொடர்ந்து நடித்த திரைப்படங்களில் வில்லத்தனத்தில் இருந்து காமெடிக்குப் பாதையை மாற்றியவர், பத்து வருடங்களாக ரசிகர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

மொட்டை ராஜேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில் ‘ராபின்ஹுட்’ திரைப்படம் மூலம் விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு போன்றவர்களின் வரிசையில் காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாகக் களமிறங்கவுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.

லூமியர்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் பழனியப்பன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ஜனவரி 27ஆம் தேதி வெளியானது. ராஜேந்திரன் கெத்தான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து நேற்று(ஜனவரி 28) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

துப்பாக்கி ஏந்திய காவலர், கையில் அரிவாளுடன் ஒரு முதியவர், எதையோ தேடும் ஒரு சிறுவன், டார்ச் லைட்டைக் கையில் வைத்திருக்கும் கோமாளி வேடமிட்ட நபர், பைனாக்குலரில் எதையோ பார்க்கும் ஒருவர் மற்றும் கட்டை வைத்திருக்கும் மற்றொருவர் என ஒரு திருடனைப் பிடிப்பதற்கான முனைப்புடன் போஸ்டரில் இடம்பெறும் அனைவரும் இருக்கின்றனர். மேலும் மரத்தின் மீது ராஜேந்திரன் இருக்கிறார். ராபின்ஹுட் என்ற பெயரும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டரும் இது ஒரு திருடனின் கதை என்பதை உணர வைத்துள்ளது.

இந்த போஸ்டரின் மூலமாக ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மொட்டை ராஜேந்திரனை ஹீரோ ராஜேந்திரனாகப் பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share