”அன்னையர் தினம்” – வாழ்த்திய அரசியல் தலைவர்கள்!

Published On:

| By indhu

"Mother's Day" - greetings from political leaders!

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை “அன்னையர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு  அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு #அம்மா!

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் #அன்னையர்_நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்! #MothersDay2024” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அன்னையர் தினத்தை முன்னிட்டு, “பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த ‘அன்னையர் தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

‘அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.

போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ‘அன்னையர் தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” என வாழ்த்தி இருக்கிறார்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “கண்ணுக்குத் தெரிந்த கடவுளாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்து, பசி, தூக்கம் மறந்து, தன் ரத்தத்தை பாலாக ஊட்டி நம்மை வளர்ப்பவள் நம்முடைய அன்னை.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருடனும் முதல் தொடர்பு கொள்ளும் மற்றொரு உயிர் என்றால் அது அன்னை தான். அந்த புதிய உயிருக்கு உலகின் அனைத்தையும் கருவிலிருந்தே முதன் முதலில் அறிமுகப்படுத்துவதும் அன்னை தான்.

அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது.

அத்தகைய பெருமைமிக்க அன்னையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் ஓயாமல் உழைத்து, அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்களின் கடின உழைப்பும், தியாகங்களும் போற்றுதலுக்குரியது.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு நன்றி செலுத்துவோம். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநரும், தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், “பாலைத் தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும்.. அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல்,அனைத்தும் கிடைக்கப் பெற்று,பெற்றவளின் மனம்குளிர கற்று, உற்ற துணையாய் முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து.. செலுத்தும் நன்றி..” என அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அன்னையர் தினத்தையொட்டி, “அன்பின் முழு உருவமாய்த் திகழ்ந்து, குழந்தைகளுக்காவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னையரை இன்று மட்டுமில்லை, எந்நாளும் போற்றி வணங்குவோம்!” என பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

HBD Edappadi: ’தாமரை’ மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து கேக் வெட்டிய எடப்பாடி!

IPL 24: பிளே ஆஃப்க்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? – டென்ஷனில் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share