தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. mother language sentiments in JAC meeting
சென்னை கிண்டியில் உள்ள தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7 மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று (மார்ச் 22) காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு சால்வை அணிவித்து, தமிழ்நாட்டின் சிறப்புமிக்க பொருட்களை அடங்கிய பரிசு பெட்டகத்தை நினைவு பரிசாக வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
கூட்டத்தை திமுக எம்.பி கனிமொழி தொகுத்து வழங்கி வருகிறார்.
கூட்ட அரங்கில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள், அவர்களின் இருக்கைக்கு முன்னதாக தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் தாய் மொழியில் பேசினாலும், கேட்பவர் அவற்றை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், பஞ்சாபி என அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து கேட்க தொழில்நுட்ப வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஆளும் திமுக அரசு கடுமையாக போராடி வரும் நிலையில், தங்களது அழைப்பின் பேரில் வந்துள்ள தலைவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், அவர்களது தாய் மொழியிலேயே கூட்டத்தில் பேசவும், பிறரின் கருத்துகளை கேட்கவும் ஏற்பாடு செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.