டெங்கு பாதிப்புகளை கட்டுபடுத்த சிறப்பு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூரில் பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் ஏற்கனவே டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்த செயற்கை கொசுக்களை உற்பத்தி செய்யும் ஒல்பேச்சியா என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கொசுக்களிடம் ஒல்பேச்சியா என்ற ஒரு வகையான பாக்டீரியா காணப்படுகிறது. இந்த பாக்டீரியாவை சுமந்து செல்லும் செயற்கை கொசுக்கள் நாட்டில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும் பொழுது, அவற்றின் முட்டைகள் குஞ்சு பொரிக்காது. இதன் மூலம் கொசுக்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு டெங்கு பாதிப்புகளை குறைக்கமுடியும். இயற்கை கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த இது போன்ற செயற்கை கொசுக்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யபட்டு வருகின்றன.
தற்போது வழக்கத்துக்கு மாறாக சிங்கப்பூரில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த செயற்கை கொசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறுகையில், “சிங்கப்பூரில் டெங்கு பாதிப்பை கட்டுபடுத்த ஏற்கனவே ஒல்பேச்சியா திட்டம் மூலம் வாரத்திற்கு 20 லட்சம் கொசுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக இதுவரை 1400க்கும் மேல் டெங்கு பாதிப்புகள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. ஆகையால் வாரத்திற்கு 50 லட்சம் செயற்கை கொசுக்களை உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.