முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மனோஜ் திவாரி நீண்ட காலமாக பெங்கால் கிரிக்கெட்டின் சேவகராக இருந்து வருகிறார். ரஞ்சி கோப்பை தொடரில் இதுவரை அவர் மூன்று இறுதிப் போட்டிகள் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆகையால் பெங்கால் கிரிக்கெட் அணிக்கு ரஞ்சி கோப்பையை வென்று தர வேண்டும் என்பது அவருடைய கனவு என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வருடமும் இறுதிப் போட்டியில் பெங்கால் கிரிக்கெட் அணி மத்தியப் பிரதேச அணியிடம் தோற்றது. இந்த வருட ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக மனோஜ் திவாரி சதம் அடித்தும் அணி தோற்றது.
மேலும் மனோஜ் திவாரி மேற்கு வங்காளத்தில் உள்ள ஷிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ. மற்றும் மேற்கு வங்க மாநில இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் அரசியலில் பணியாற்றிக் கொண்டே தீவிர கிரிக்கெட் வீரராக இருப்பது ஆச்சரியத்திற்குரியது.
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுகையில் இது முழுக்க முழுக்க மன உறுதி மற்றும் நேர மேலாண்மை பற்றியது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எனது தொகுதியில் நான் உருவாக்கிய அணி மற்றும் அனைத்து கட்சி தொண்டர்களும் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறார்கள். நான் கிரிக்கெட் விளையாடும் போது நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அனைத்து ஆவணங்களையும் அனுப்பிவிடுவார்கள். காலையில் நான் கிரிக்கெட் விளையாடுகிறேன், பின்னர் மாலையில் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு கூரியர் மூலம் திருப்பி அனுப்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
