கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்த 2 பேரை இன்று (டிசம்பர் 2 )காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. பிரம்மாண்டமான இந்த குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்திற்குள் கடந்த வெள்ளியன்று பட்டப்பகலில் நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்று ஏ பிளாக்கில் 3 வீடுகள், சி பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தமாக 13 வீடுகளில் கொள்ளையடித்தனர். மொத்தம் 42 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம், 500கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குடியிருப்பு வளாகத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொர்புடைய 3 பேர் குளத்துபாளையம் பகுதியில் இருந்த வீட்டில் பதுங்கி இருந்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது மூவரும் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இந்நிலையில் ஆசிப், இர்பான், ஆரிப் ஆகிய மூவரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ஆசிப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் ஆயுப் கானை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்த உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த தாவூத், பர்மான் ஆகிய இரண்டு பேரையும் இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
