திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள்- மதிமுக பொதுக்குழு தீர்மானம்!

Published On:

| By Minnambalam Desk

MDMK General Council

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும்; தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மீண்டும் பெறும் வகையில் திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்டு பெற்று போட்டியிடுவது என அக்கட்சியின் ஈரோடு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.DMK Alliance – MDMK Council Meeting

மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று ஜூன் 22-ந் தேதி நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திமுக கூட்டணி

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடர்ந்து நீடிக்கும்

ADVERTISEMENT

அங்கீகாரத்துக்காக கூடுதல் தொகுதிகள்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மதிமுக மீண்டும் பெறுவதற்காக திமுக கூட்டணியில் அதிகமான இடங்களைக் கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும்

ADVERTISEMENT

கீழடி- மத்திய அரசுக்கு கண்டனம்

கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, கடந்த 2024 டிசம்பர் மாதம், இதற்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016-இல் நடைபெற்ற கீழடி முதல், 2-ஆம் கட்ட அகழாய்வு – அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களை கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

முழுமையான ஆய்வுக்கு பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

கீழடியில் 1, 2, 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது.

தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ஆம் கட்ட முடிவுகள் வெளியாகவில்லை. முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024 , பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) உத்தரவிட்டது. இது தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு, அறிக்கையை “மேலும் நம்பகத்தன்மை” கொண்டதாக மாற்றும்படி கோரியது.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடியில் பண்டைய நாகரிகத்தின் தடயங்களை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவர் தயாரித்த 982 பக்க அறிக்கை, கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமக்கரி (Charcoal) மாதிரிகளின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 200 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல கலைப்பொருட்கள், தமிழகத்தில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றன.

இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி.500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தம் தேவையில்லை என்றும் அவரது கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் நடவடிக்கை கீழடி அகழாய்வு முடிவுகளை இருட்டடிப்பு செய்து வேதகால நாகரிகத்தை தூக்கிப் பிடிக்கும் கூட்டத்தின் உள்நோக்கத்தை புலப்படுத்துகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்புத் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது, என்கிற ஆய்வு முடிவை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.

ஆனால், கீழடி தமிழ் நாகரிகத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரிகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்; ஆரியர்கள்தான் பூர்வகுடிகள்; வேத இதிகாச புராணங்கள்தான் இந்தியாவின் வரலாறு என நிறுவத் துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய பாஜக அரசு, தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்று இந்தி ஆதிக்கத்தையும், சமஸ்கிருத பண்பாட்டையும் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது.

பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும் என்பதை மதிமுக பொதுக்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.

திருச்சி மாநாடு

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடி வரும் மறுமலர்ச்சி திமுக, இந்த ஆண்டு அறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்துவது என்று தலைமைக் கழகம் முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் விடிய விடிய பேரணி, மாநாடுகள் என்று மறுமலர்ச்சி திமுக தான் வரலாறு படைத்திருக்கிறது.

எனவே திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளவாறு மண்டல வாரியாக கழகச் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்துவது என்று இப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

திராவிட பயிலரங்கு

திராவிட இயக்க இலட்சியங்களை, கொள்கைக் கோட்பாடுகளை வருங்கால தலைமுறை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மறுமலர்ச்சி திமுக பயிற்சிப் பாசறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி, பொறியாளர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கு 2025 ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையில் மண்டல வாரியாக திராவிட பயிலரங்கம் நடத்துவது என்று பொதுக்குழு முடிவு செய்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மதிமுக மீண்டும் பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றுப் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share