மோன்தா தீவிர புயலாக உருவாகி ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 25) கூறியுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தற்போது வேளச்சேரி, கிண்டி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்தசூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பான அடுத்தடுத்த தகவலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 25) வெளியிட்ட அறிவிப்பில், ‘தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 7 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
- அந்தமான் & நிகோபார் தீவுகளில் இருந்து சுமார் 440 கி.மீ தொலைவில் மேற்கு-தென்மேற்கிலும்
- விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து 970 கி.மீ தொலைவில் தென்கிழக்கிலும்
- சென்னையில் இருந்து 970 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கிலும்,
- காக்கிநாடாவில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து 990 கி.மீ தொலைவில் தென்கிழக்கிலும்
- கோபால்பூரில் (ஒடிசா) இருந்து 1040 கி.மீ தொலைவில் தென்-தென்கிழக்கிலும் உள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அக்டோபர் 27-ஆம் தேதி காலைக்குள் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன் பிறகு, இது வடமேற்கு திசையிலும், பின்னர் வடக்கு-வடமேற்கு திசையிலும் நகர்ந்து, அக்டோபர் 28-ஆம் தேதி காலைக்குள் தீவிரப் புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும்.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28-ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மசூலிப்பட்டினம் (Machilipatnam) மற்றும் கலிங்கப்பட்டினம் (Kalingapatnam) ஆகியவற்றுக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில், தீவிரப் புயலாகக் கடக்க அதிக வாய்ப்புள்ளது.
புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், இடைஇடையே 110 கி.மீ வரைக்கும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்று கூறியுள்ளது.
