வங்க கடலில் உருவான Montha புயல், ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் நாளை (அக்டோபர் 28) கரையை கடக்க உள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி முதல் தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் கடந்த 24-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிநிலைகளைத் தாண்டி தற்போது புயலாக வலுவடைந்து நகருகிறது.
நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்க கடலில் உருவான முதலாவது புயல் இது. இதற்கு மோன்தா – Montha என பெயரிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிமீ தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டு நகர்ந்து வருகிறது.
மோன்தா புயல், ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டிணம்- கலிங்கபட்டிணம் இடையே காக்கிநாடா அருகே நாளை மாலை அல்லது இரவு கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காக்கிநாடா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பிரகாஷம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயலை எதிர்கொள்வதற்கு ஆந்திரா மாநில அரசு முழு அளவில் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
மோன்தா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 27) அதிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
இதனிடையே, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
