எனது சுயமரியாதைக்கு சவால் விடப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே ஆவேசம்!

Published On:

| By Monisha

monsoon session postponed today

மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 26) 5வது நாளாக காலை 11 மணிக்குத் தொடங்கியது. அப்போது மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசிக் கொண்டிருந்த போது அவருடைய மைக் ஆஃப் செய்யப்பட்டதாக திமுக எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, யார் உத்தரவின் பேரில் மைக் ஆஃப் செய்யப்பட்டது?. மைக்கை ஆஃப் செய்வது போன்ற நிகழ்வுகள் எப்போதும் மாநிலங்களவையில் நடைபெற்றதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால் யாருடைய மைக்கும் ஆஃப் செய்யப்படவில்லை என்று மாநிலங்களவை தலைவர் விளக்கம் அளித்தார். மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க குறுகிய நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நேரடியான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.

குறுகிய கால விவாதம் என்பது ஏற்புடையது அல்ல என்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், “பேசி கொண்டிருக்கும் போதே மைக்கை ஆஃப் செய்வது சரியானதல்ல. என்னுடைய சுயமரியாதைக்கு சவால் விடப்படுகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து ’மணிப்பூர்,  மணிப்பூர்’  என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அப்போது ஆளுங்கட்சி எம்.பிக்கள்  ‘மோடி, மோடி’ என பதிலுக்கு முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் தொடங்கிய போதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மோனிஷா

தேமுதிக – பாஜக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்!

கால்வாய்க்காக அழிக்கப்படும் நெற்பயிர்கள்: என்.எல்.சி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share