தமிழகத்தில் 29 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக நாளை (அக்டோபர் 28) தமிழ்நாடு, புதுவை- காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (அக்டோபர் 29) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,
விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் சென்னையில் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் இன்று (அக்டோபர் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”வங்கக்கடலில் ஏற்பட்ட சிட்ரங் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேச பகுதியைக் கடந்து சென்றது. இதனால் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரப்படி தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து அக்டோபர் 23 ஆம் தேதி விலகியது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விட 45% அதிகமாகப் பெய்துள்ளது.
தமிழகம் கேரளா மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.
பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்
இந்த மழை படிப்படியாக அதிகரித்து அக்டோபர் 4 ஆம் தேதி வரை அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
செயற்கை நுண்ணறிவு (ரேடார்) மூலம் சென்னை போன்ற நகரங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கான மழை பொழிவு எச்சரிக்கையை துல்லியமாக வெளியிட்டு வருகிறோம்.
அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
தமிழக கோயில்கள் என்ன சத்திரமா? – தனிநபர் யாகம் நடத்த உயர் நீதிமன்றம் தடை!