ADVERTISEMENT

மழை நின்றபின்… குழந்தைகளையும், உங்களையும் நோய்களிலிருந்து பாதுகாக்க இந்த ‘கேடயம்’ ரெடியா?

Published On:

| By Santhosh Raj Saravanan

monsoon health tips protect kids from dengue leptospirosis food safety tamil

வெளியே இடைவிடாமல் கொட்டும் மழை, ஜன்னல் ஓரம் சூடான டீ… கேட்பதற்கே ரம்மியமாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த அழகிய மழைக்காலம் தன்னுடன் கூடவே சில விரும்பத்தகாத விருந்தாளிகளையும் அழைத்து வருகிறது. அதுதான் தொற்று நோய்கள்.

தற்போது மழை பெய்து கொண்டிருக்கும் இந்தச் சூழலிலும், மழை சற்று ஓய்ந்த பிறகு வரும் நாட்களிலும் நம் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக இருக்கப்போவது அசுத்தமான நீர் மற்றும் கொசுக்கள் தான். “சளி, காய்ச்சல் தானே…” என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். டைபாய்டு, டெங்கு, எலிக்காய்ச்சல் (Leptospirosis) போன்றவை வரிசைகட்டி நிற்கின்றன.

ADVERTISEMENT

பெரியவர்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும் இவற்றிலிருந்து பாதுகாக்க நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். இதோ உங்களுக்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டி:

1. குடிநீரில் சமரசம் வேண்டாம் (Boil It, Drink It) மழைக்காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால், கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் அதிகம். பார்க்கத் தெளிவாகத் தெரிந்தாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கலாம்.

ADVERTISEMENT
  • அதனால், தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி (Boiled Water) மட்டுமே குடிக்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீர் கொடுப்பது சிறந்தது. இது செரிமானத்தை எளிதாக்குவதுடன், தொண்டை வலி மற்றும் சளி பிடிப்பதைத் தவிர்க்கும்.

2. கால்களைப் பத்திரமாகப் பாருங்கள் (Beware of Leptospirosis) மழைநீரில் நடப்பது சிலருக்கு ஜாலியாக இருக்கலாம். ஆனால், தேங்கியிருக்கும் மழைநீரில் எலிகளின் சிறுநீர் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இது எலிக்காய்ச்சலை (Leptospirosis) பரப்பும்.

  • தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மழைநீரில் நடக்க நேர்ந்தால், வீட்டிற்கு வந்தவுடன் கால்களை வெதுவெதுப்பான நீர், கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
  • காலில் சிறிய காயம் இருந்தால் கூட, அது வழியாகக் கிருமிகள் உள்ளே செல்லலாம். எனவே, வாட்டர் ப்ரூஃப் பாண்டேஜ் (Waterproof Bandage) பயன்படுத்துவது அவசியம்.

3. உணவில் கவனம் தேவை மழைக்காலத்தில் நம் செரிமான மண்டலம் இயல்பாகவே சற்று மந்தமாக இருக்கும்.

ADVERTISEMENT
  • தெருவோரக் கடைகளில் விற்கும் பஜ்ஜி, போண்டா மற்றும் பானிபூரி போன்ற திறந்தவெளி உணவுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
  • வீட்டிலேயே சமைத்த சூடான, ஃப்ரெஷ்ஷான உணவை மட்டுமே சாப்பிடுங்கள். மீந்துபோன உணவை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்திச் சாப்பிடுவதைத் தவிருங்கள். இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்.

4. கொசுக்களுக்குநோசொல்லுங்கள் மழை பெய்யும்போது கொசுக்கள் வீட்டுக்குள் தஞ்சம் புகும். மழை நின்ற இடைவெளியில் தேங்கிய நீரில் முட்டையிடும்.

  • பகல் நேரத்தில் கடிக்கும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் தான் டெங்குவைப் பரப்புகின்றன. எனவே, குழந்தைகளை முழுக்கை சட்டை (Full sleeve) மற்றும் கால் சட்டை அணிவித்து உறங்க வைப்பது பாதுகாப்பானது.
  • மாலை நேரங்களில் ஜன்னல்களைச் சாத்தி வையுங்கள். வேப்பெண்ணெய் அல்லது கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

5. குழந்தைகளுக்கான ஸ்பெஷல் கேர் குழந்தைகள் மழையில் நனைய ஆசைப்படுவார்கள். அவர்களை அனுமதித்தாலும், உடனே தலை துவட்டி, உலர்ந்த ஆடைகளை அணிவிக்கவும். தலைமுடி ஈரம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். வாரம் இருமுறை நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுரக் குடிநீரைக் கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

மொத்தத்தில் மழைக்காலம் முடியும் வரை விழிப்புடன் இருப்போம். காய்ச்சல், உடல் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் பார்க்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். பாதுகாப்பான மழையை ரசிப்போம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share