கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே மாபெரும் போராட்டத்தை சந்தித்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குரங்கு அம்மை காய்ச்சல் பரவல் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த குரங்கு அம்மைக் காய்ச்சல், கொரோனா போலவே உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது. குரங்கு அம்மைக் காய்ச்சல் கொரோனா பெருந்தொற்றை போல பரவாது என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தும், உலகளவில் குரங்கு அம்மை காய்ச்சல் பரவல் அதிகரிப்பதால், இதற்கான தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த நாட்டு அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
பொதுவாக ஆசிய நாடுகளில் பரவும் குரங்கு அம்மை காய்ச்சலானது ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் அறிகுறிகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், தசை வலி, குளிர், சோர்வு, கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி ஏற்படுகிறது. குரங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், மக்கள் அனைவரும் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குரங்கு அம்மை நோய் பொதுவாக 2 முதல் 4 வாரங்களில் சரியாகிவிடும் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருப்பவர்கள், முக கவசம் அணிந்து தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது என்று உலக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு இந்தக் குரங்கு அம்மை காய்ச்சல் பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 22 வயது முதல் 63 வயதுள்ள ஆண்கள் என்றும், ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தற்பொழுது குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்றும் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
