சின்னக் கவுண்டர் படம் பார்க்காத “மொய் விருந்து” பட இயக்குனர்

Published On:

| By Minnambalam Desk

விஜயகாந்த் முற்றிலும் வேறு தோற்றத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சின்னக் கவுண்டர். அதுவரை ஆக்ஷன் ஹீரோ, கோபக்கார இளைஞன் என்று பெயர் பெற்று வந்த விஜயகாந்தை வைத்து, கனமான கதாபாத்திரங்களும் செய்யலாம் என்று நம்பிக்கை தந்த படம் அது.

நம்பிக்கை வரக் காரணம் அந்தப் படத்தின் வெற்றி. வெற்றிக்குக் காரணம் அந்தப் படத்தில் வந்த மொய் விருந்து காட்சி.

ADVERTISEMENT

அதாவது கிராமங்களில் ஏதாவது ஒரு குடும்பம் நொடித்துப் போனால் அவர்களுக்கு பணம் தேவை என்றால் நேரடியாக உதவி கேட்க மனம் ஒப்பாத நிலையில், ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து விருந்து என்ற பெயரில் சாப்பாடு போடுவார்கள்.

வந்து சாப்பிடுபவர்கள் சாப்பிட்டு விட்டு, இலைக்கு அடியில் பணம் வைத்து விட்டுப் போவார்கள். அதாவது கொடுப்பவரும் பெறுபவருக்கு முகம் பார்த்து கொடுக்கவோ வாங்கவோ மாட்டார்கள். கண்ணியமான நாகரீகமான இங்கிதமான உதவி (வாட்ஸ் அப்பில் பணம் கேட்பவர்களுக்கு கூகிள் பே மூலம் பணம் அனுப்புகிறோமே… அதுபோல !)

ADVERTISEMENT

சின்னக் கவுண்டர் படத்தில் சுகன்யா அப்படி, மொய் விருந்து போட விஜயகாந்த் வந்து சாப்பிட்டு விட்டு, இலைக்கு அடியில் பணத்துக்குப் பதில் தாலியை வைத்திருப்பார். அப்படியே வானத்தைப் போல என்ற… பாடல் துவங்கும்.

அந்தக் காட்சியில் ரசிகர்கள் சிலிர்த்துப் போனார்கள் .

ADVERTISEMENT

அதன் பிறகு இரண்டாம் பகுதி படம், ரசிகர்களை ஒரு வழி செய்யும். என்றாலும், தாலி காட்சியில் ஏற்பட்ட சிலிர்ப்புக்காகவே மாபெரும் வெற்றி பெற்ற படம் அது.

இப்போது இத்தனை வருடம் கழித்து மொய் விருந்து என்ற பெயரிலேயே ஒரு படம் வருகிறது.

SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் C.R. மணிகண்டன் இயக்கத்தில் வரும் படம் .

மஞ்சப்பை, கடம்பன், மை டியர் பூதம் படங்களில் பணியாற்றியவர் C.R. மணிகண்டன் .

‘ஊர்வசி’ அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். ரக்‌ஷன் மற்றும் ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம், கொட்டச்சி இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் முழு படப்பிடிப்பும் கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றிக் கூறும் இயக்குனர் “நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, ‘மொய்விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப் பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி, சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும்.

இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப் படம், அதனால் தான் இந்தப் படத்திற்கு ‘மொய் விருந்து’ என்று தலைப்பு வைத்துள்ளோம், “என்றார் .

அப்போ நீங்க சின்னக் கவுண்டர் பாக்கல. அப்படித்தானே? ரைட்டு விடுங்க

-ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share