ஈரான் நாட்டில் நடக்கவிருந்த கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்திய கிளப்பான மோகன்பகான் மறுத்ததால், ஆசிய கால்பந்து சங்கம் போட்டியில் இருந்து நீக்கியுள்ளது.
லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா இயக்கம், ஹமாஸ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நாடும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி ஈரான் நாட்டிலுள்ள டப்ரிஸ் என்ற நகரத்தில் ஆசிய சாம்பியன்ஸ் லீக் தொடர் 2 பி பிரிவு ஆட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த மோகன் பகான் அணி ட்ராக்டர் எப்.சி அணியுடன் மோதவிருந்தது. ஆனால், போர் சூழல் காரணமாக மோகன்பான் அணி ஈரானுக்கு செல்லவில்லை.
மேலும், இந்த நகரம் இஸ்ரேல் நாட்டுக்கு மிக அருகில் இருப்பதாலும் இதற்கு முந்தைய போட்டி நடந்த போது, ஸ்டேடியத்துக்கு மேலே ஏவுகணைகளும் பறந்து சென்றதாக மோகன்பகான் அணி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,நிர்வாகம் வீரர்களை ஈரான் நாட்டுக்கு அனுப்ப விரும்பவில்லை.
தொடர்ந்து, மோகன்பகான் அணி இதற்கு முன்னர் விளையாடிய ஆட்டங்களில் அடித்த கோல்களும் புள்ளிகளும் பூஜ்யமாக்கப்பட்டுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் லீக் தொடர் 2ல் இருந்தும் மோகன் பகான் அணி நீக்கப்படுவதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மோகன் பகான் அணி நிர்வாகம் ஆசிய கால்பந்து சம்மேளனத்துக்கு விளக்க கடிதம் அனுப்பியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லையா? – ஆளுநருக்கு ரகுபதி பதிலடி!
கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி