இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு அவரின் மனைவி சாயிரா பானு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். சாயிரா பானுவின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே அவரது இசைக்குழுவில் கிட்டாரிஸ்ட்டாக இருந்த மோகினி தே தனது கணவரைப் பிரிவதாக அறிவிக்க, பல கேள்விகள் எழுந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை பிரிய இவர்தான் காரணமாக இருப்பாரோ? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, மோகினி தே கணவரை பிரிவதற்கும் ரஹ்மான் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்திருந்தார்.
இதற்கிடையே, ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோரும் வதந்தி பரப்புவோருக்கு கண்டனம் தெரிவித்தனர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது தந்தையின் கண்ணியத்தையும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை பேட்டி எடுக்க பல மீடியாக்கள் போட்டி போடுகின்றன. ஆனால், அதற்கெல்லாம் என்ன காரணம் என எனக்கு நன்றாகவே தெரியும். நான் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை.
என்னை நேர்காணல் எடுப்பதற்காக அனுகியவர்களிடம் முடியாது எனக் கூறிவிட்டேன். வதந்திகளுக்கு பதில் அளித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடி கொண்டிருக்க முடியாது. எனது, சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. எனது தனியுரிமையும் சுதந்திரத்தையும் மதிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… பாஜகவை பின்னுக்கு தள்ளிய ஹேமந்த் சோரன்