ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து, அம்மா தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் பதவி விலகியுள்ளார்.
அம்மா என்று அழைக்கப்படும் கேரள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளே பலர் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
பாலியல் புகார் சொல்லப்பட்டதையடுத்து, கேரள பிலிம் அகாடமி தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் ரஞ்சித் விலகியுள்ளார். பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா ரஞ்சித் மீது பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இமெயில் வழியாக கொச்சி போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரை எஸ்.பி பூங்குழலி விசாரித்து வருகிறார். ஸ்ரீலேகா மித்ரா, டைரக்டர் ரஞ்சித் மற்றும் சாட்சியங்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து , பல நடிகைகள் இயக்குநர்கள், நடிகர்கள் மீது புகார் தெரிவித்து வருகின்றனர். கொல்லம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைகள் குறித்து அம்மாவின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், தலைவர் மோகன்லால் சென்னையில் இருந்ததால், விவாதம் தள்ளிப் போடப்பட்டது. இதற்கிடையே, அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
மோலிவுட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் போனதால், நடிகர் மோகன்லால் பதவி விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஹேமா கமிட்டி அறிக்கையால் அம்மா நிர்வாகிகள் மற்றும் முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிபடுவதால் நடிகர் மோகன்லால் மட்டுமல்லாமல் அம்மாவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான 17 பேருமே பதவியை ராஜினாமா செய்து விட்டனர். தற்போது, அம்மா அமைப்பை நிர்வாகிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ : ரிலீஸ் எப்போ தெரியுமா?