மீண்டும் ‘அரசியல்’ பின்னணியில் ஒரு ஆக்ஷன் அதகளம்! Empuraan Movie Review
கடந்த பத்தாண்டுகளில் மலையாள நட்சத்திரம் மோகன்லால் நடித்த திரைப்படங்களில் சில நூறு கோடி ரூபாய் வசூலைத் தொட்டன. அவற்றில் ஒன்றான ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எல்2: எம்புரான்’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
முதல் பாகம் தாமதமாகவே தமிழில் ‘டப்’ செய்யப்பட்டாலும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டு, ‘பான் இந்தியா’ படமாக அடையாளப்படுத்தும் வகையில் எம்புரானை தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடும் முடிவைச் செயல்படுத்தியிருக்கிறது படக்குழு. Empuraan Movie Review
’லூசிஃபர்’ தந்த நடிகர் பிருத்விராஜே இதனை இயக்கியிருக்கிறார். முரளி கோபி இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். தீபக் தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
முதல் பாகத்தில் வந்த மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சாய்குமார், நந்து, பாசில், ஷிவதா, சானியா அய்யப்பன் உள்ளிட்டவர்களோடு இதில் புதிதாக அபிமன்யூ சிங், கிஷோர், சுகந்த் கோயல் மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களான ஜெரோம் பிளின், ஆண்ட்ரியா திவேதார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Empuraan Movie Review
சரி, ‘எல்2: எம்புரான்’ தரும் திரையனுபவம் எத்தகையது? Empuraan Movie Review

கேரள அரசியல் பின்னணி! Empuraan Movie Review
ஐயுஎஃப் எனும் கட்சியை வழி நடத்திய முதலமைச்சர் ராம்தாஸ் மறைவுக்குப் பிறகு கேரள அரசியல் களத்தில் நிகழும் குழப்பங்களைத் தீர்க்க, வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் ஜதினை அழைத்து வருகிறார் நெடும்பள்ளி எம்.எல்.ஏவான ஸ்டீபன். ராமதாஸின் இழப்பால் குடும்பத்திலும் அவரது கட்சியிலும் ஏற்பட்ட குழப்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார்., அவருக்கு ‘குரேஷி ஆஃப்ராம்’ எனும் இன்னொரு பெயர் இருப்பதும், உலக நாடுகள் பல அஞ்சி நடுங்குகிற கேங்ஸ்டராக அவர் திகழ்வதும் நமக்குத் தெரிய வருவதோடு முதல் பாகமான ‘லூசிஃபர்’ முடிவடைந்திருந்தது.
அந்த முன்கதைச் சுருக்கம் ஏதும் தேவைப்படாத அளவுக்குத் தொடங்குகிறது ‘எம்புரான்’ திரைக்கதை. மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் சிலர் அருகிலுள்ள அரண்மனையில் வசித்துவரும் ராஜ வம்சத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அடைக்கலம் கேட்டுச் செல்வதில் இருந்து தொடங்குகிறது. Empuraan Movie Review
அந்த ராஜ குடும்பத்து வாரிசு அவர்களைத் தனது அரண்மனையின் ஓரிடத்தில் தங்க வைக்கிறார். ஆனால், அதனைத் தெரிந்துகொண்டு தாக்குதல் நடத்த வருகிறது பல்ராஜ் படேல் (அபிமன்யூ சிங்) தலைமையிலான ஒரு கும்பல். சயீத் மசூத் எனும் இளைஞனின் குடும்பம் உட்பட அவர்களது வன்முறையால் அடைக்கலம் கேட்டு வந்தவர்கள் அனைவருமே உயிரிழக்கின்றனர். அந்த வன்முறைச் சம்பவத்தில் உயிர் தப்பும் சயீத் மசூத்தை ஒரு தீவிரவாத இயக்கம் பயன்படுத்திக்கொள்ள முனையும்போது, குரேஷி ஆஃப்ராம் ஆட்கள் அவரை மீட்கின்றனர். Empuraan Movie Review
மேற்சொன்ன சம்பவம் 2003இல் நிகழ்கிறது. அதன்பின் திரைக்கதை சமகாலத்திற்குத் தாவுகிறது. Empuraan Movie Review
கேரள முதலமைச்சராக இருந்து வரும் ஜதின் ராம்தாஸ் (டொவினோ தாமஸ்) தான் சார்ந்த ஐயுஎஃப் கட்சியில் இருந்து விலகிப் புதிதாக ஐயுஎஃப் (பிகேஆர்) எனும் கட்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவிக்கிறார். அது ஐயுஎஃப் மட்டுமல்லாமல் எதிர்கட்சியான ஆர்பிஐ (எம்)மை சார்ந்தவர்களையும் திடுக்கிட வைக்கிறது. மேலும், இந்துத்துவ அடையாளமாகத் திகழும் பஜ்ரங்கி உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவிக்கிறார் ஜதின்.
இந்த பஜ்ரங்கி தான் ஒருகாலத்தில் பல்ராஜ் படேல் என்ற பெயரில் இருந்தவர். அவரது வரலாற்றை அறியும் பத்திரிகையாளர் கோவர்தன் (இந்திரஜித்), இந்த ‘மூவ்’ பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்று அறிய முயற்சிக்கிறார். அதனைத் தெரிந்துகொள்ள முடியாத பட்சத்தில், வரவிருக்கும் பிரச்சனையில் இருந்து கேரளத்தைக் காப்பாற்ற ஸ்டீபனால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார். ஆனால், அவரை எப்படித் தொடர்புகொள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.
ஒருநாள் திடீரென்று ஸ்டீபனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கோவர்தனுக்குக் கிட்டுகிறது. அப்போது, அவரிடம் பேசும் ஸ்டீபன் ‘விரைவில் கேரளத்தில் நிகழும் குழப்பங்கள் முடிவுக்கு வரும்’ என்று உறுதியளிக்கிறார். Empuraan Movie Review
ஆனால், சில நாட்கள் கழித்து ஈராக்கில் ஸ்டீபன் எனும் குரேஷி ஆஃப்ராம் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அது ஜதினை ஆறுதல்படுத்துகிறது. அதேநேரத்தில், அவரது சகோதரி பிரியதர்ஷினியை (மஞ்சு வாரியர்) கவலைக்கு உள்ளாக்குகிறது. Empuraan Movie Review
இந்த நிலையில், திடீரென்று கேரள அரசியல் களத்தில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனை ஐயுஎஃப் கட்சித்தலைவர்கள் எப்படி எதிர்கொண்டனர்? அதில் பிரியதர்ஷினியின் பங்கு என்னவாக இருந்தது? ஜதின் – பஜ்ரங்கி கூட்டணி என்னவானது? ஸ்டீபன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இந்த கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளிக்கிறது ‘எல்2: எம்புரான்’னின் இரண்டாம் பாதி.
கேரளாவின் சமகால அரசியல் நகர்வுகளை அறிந்தவர்களுக்கு, இப்படம் அவற்றை லேசாகத் தொட்டுச் செல்வது ஆச்சர்யத்தைத் தரும்.
முரளிகோபி முன்னர் எழுத்தாக்கம் செய்த ‘தியான்’ படத்திலும் கூட, கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதை சொல்லலைக் கையாண்டிருந்தார். ஆனால், அப்படம் கமர்ஷியலாக அமையவில்லை. இந்த படத்தில் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார்.
என்னதான் அரசியல் பின்னணியில் அமைந்தாலும், இப்படம் ‘பொலிடிகல் த்ரில்லர்’ ஆக அமையவில்லை. மாறாக, ஸ்டீபன் எனும் பாத்திரத்தின் ‘ஆக்ஷன் அதகளம்’ ஆகவே திரைக்கதை தோற்றம் தருகிறது.

பிரமிக்க வைக்கும் ‘காஸ்ட்டிங்’!
மோகன்லால் தான் இப்படத்தின் நாயகன். ஆனால், அவரைப் பற்றி பிற பாத்திரங்கள் பேசுகிற, சிலாகிக்கிற வகையிலேயே இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப, லாலேட்டனும் படம் முழுக்க ‘ஸ்லோமோஷனில்’ அடியாட்கள் புடைசூழ நடந்து வருகிறார். அது போக, இடைவேளைக்குப் பின்னர் வரும் சண்டைக்காட்சியில் அவர் ஹீரோயிசம் காட்டுகிற ஷாட்கள் உள்ளன.
அவற்றைத் தாண்டி, அவர் தனது நடிப்புத்திறமையைக் காட்ட இப்படத்தில் இடம் ஏதும் இல்லை. கேங்ஸ்டராக திரையில் தோன்றும்போது ஏற்படுகிற சாபக்கேட்டை இதில் மோகன்லால் எதிர்கொண்டிருக்கிறார்.
டொவினோ தாமஸ் இதில் வில்லன் போன்று வந்து போயிருக்கிறார். அவரைக் காட்டிலும், நம்மை மிரட்டுவது என்னவோ அபிமன்யூ சிங் தான்.
இவர்களோடு சூரஜ் வெஞ்சாரமூடு, சுகந்த் கோயல் போன்றவர்களும் இதில் எதிர்தரப்பில் முறைப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
முன்பாதியில் பெரிதாக மஞ்சு வாரியருக்குக் காட்சிகள் இல்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் விதமாக, கிளைமேக்ஸ் நெருக்கத்தில் அவரை புலனாய்வு அமைப்புகள் கைது செய்வதாக ஒரு காட்சி வருகிறது. ‘எம்புரான்’னின் ஹைலைட் அது என்று தாராளமாகச் சொல்லலாம். அக்காட்சியில் நாடு கண்ட பெண் அரசியல் தலைவர்கள் சிலரை நமக்கு நினைவூட்டுகிறார் மஞ்சு.
இவர்களோடு கிஷோர், இந்திரஜித், பாசில், சச்சின் கடேகர், சாய்குமார், பைஜு சந்தோஷ், நந்து, சானியா அய்யப்பன், நைலா உஷா, ஷிவதா என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
லண்டன், செனகல், ஈராக் என்று வெவ்வேறு இடங்களுக்குக் கதை நகர்வதற்கு ஏற்ப இதில் ஆண்ட்ரியா திவதார், ஜெரோம் பிளின் உள்ளிட்ட வெளிநாட்டுக் கலைஞர்கள் சிலர் தலைகாட்டியிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட மூன்று டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பிரதானமாகத் தோன்றியிருக்கின்றனர். இந்த ‘காஸ்ட்டிங்’ மட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் நாம் உள்வாங்கிக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் காட்சியாக்கம் செய்திருப்பது நிச்சயம் பிரமிப்புக்குரியது.
‘லூசிஃபர்’ படத்தில் மோகன்லாலின் அடியாட்களில் ஒருவராக வந்த பிருத்விராஜின் ‘சயீத் மசூத்’ பாத்திரத்தின் பின்னணியை விரிவாகச் சொல்கிறது இரண்டாம் பாகம். அது தொடர்பான காட்சிகளில் வன்முறை கொஞ்சம் அதீதமாகத் தோன்றும். அதற்கு ‘பழி வாங்குவது’ போன்ற காட்சியொன்றும் படத்தில் இருக்கிறது. ஆனாலும், மத தீவிரவாதம் தொடர்பான அக்காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் ரகமே!
’எம்புரான்’ படமானது ‘லூசிஃபர்’ரில் இருந்து வேறுபட்டு நிற்கக் காரணமாக இருப்பது, சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளில் நிகழும் சில சம்பவங்கள் இத்திரைக்கதையில் இணைக்கப்பட்டிருப்பது தான். அது மட்டுமல்லாமல், அக்காட்சிகளில் ஆங்கிலம், செனகல், மாண்டரின் உட்பட வெளிநாட்டு மொழிகள் பேசுவதாகவும் காட்டப்படுகிறது. என்னதான் சப்டைட்டில் இட்டாலும், அக்காட்சிகள் கொஞ்சம் அயர்ச்சியைத் தரும் என்பதை மறுப்பதற்கில்லை. இப்படத்தின் குறைகளில் தலையாயது அது.
இதிலுள்ள சில காட்சிகள் செய்திகளாகவோ, ஊகங்களின் அடிப்படையிலான தகவல்களாகவோ ஒரு சாதாரண பார்வையாளர் அறிந்ததாக இருக்கும். அவற்றைக் காட்சியாக்கம் செய்த வகையில் பலரது கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறது ‘எம்புரான்’.
ஒரு இந்துத்துவ அமைப்போடு கேரளத்தில் உள்ள சில கட்சிகள் உடன்பாட்டிற்கு வருவது போன்ற காட்சிகள் ஏற்கனவே சர்ச்சைகளை எழுப்பியிருக்கின்றன. படத்தில் அவை விரிவாகக் காட்டப்படவில்லை. ஆனாலும், அவை எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வெறுமனே நாயகனை மையமாகக் கொண்டு கதையை நகர்த்தாமல், ஒரு மாநிலத்தின் அரசியல், சமூக, கலாசாரப் பின்னணியை விவரிக்க முயற்சித்திருக்கிறது ‘எம்புரான்’. ஆனால், அதில் போதிய கவனத்தைச் செலுத்தாமல் ஒரு கேங்ஸ்டர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் அதுவே உள்ளது.
முரளிகோபி – பிருத்விராஜ் இருவருமே அது தொடர்பான எதிர்வினைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
பட ஆக்கத்தைப் பொறுத்தவரை, மலையாளத் திரையுலகில் முக்கியமானதொரு கமர்ஷியல் பட இயக்குனராக பிருத்விராஜ் உருவெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். இயக்குனர் ஜோஷியின் தாக்கம் அவரிடத்தில் நிறையவே தெரிகிறது எனலாம்.

திரையில் பிரமாண்டம் தெரிகிறது என்றால், அதற்கான காரணமாக ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குனர் மோகன்தாஸ், ஒலி வடிவமைப்பாளர் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், ஸ்டண்ட் கொரியோகிராஃபர் ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன் உள்ளிட்ட பலரது பங்களிப்பு உள்ளது.
இசையமைப்பாளர் தீபக் தேவ், ஒரு கமர்ஷியல் மலையாளத் திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் நமக்குத் தந்திருக்கிறார். பாடல்கள் ஆக்ஷன் காட்சிகளின் பின்னணியில் அமைந்திருப்பதும் அத்தகையதே.
நிச்சயம் இது பிருத்விராஜ் – மோகன்லால் கூட்டணியின் ‘மைல்கல்’ படம் அல்ல. ‘கேஜிஎஃப்’ இரண்டு பாகங்கள் போன்று இது மிகச்செறிவான கமர்ஷியல் பட அனுபவத்தையும் தரவில்லை. அதேநேரத்தில், ‘லூசிஃபர்’ மூலம் கிடைத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும்விதமாகவும் இல்லை. அதுவே ‘எல்2: எம்புரான்’னின் பெரும்பலம். அதற்குத் தக்க பலன், விமர்சனங்கள், கருத்து தெறிப்புகள் இனிவரும் நாட்களில் கிடைக்கும்..! Empuraan Movie Review
